சிங்கப்பூரில் நிகழ்ந்த இரண்டு விபத்துகள் தொடர்பாக மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் அனைத்துலகப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு இன்று 10 வார சிறைத் தண்டனையும் $1,600 அபராதமும் விதிக்கப்பட்டது. ஜோகூரில் உள்ள மார்ல்பரோ காலேஜ் மலேசியா எனும் கல்லூரியில் பணிபுரிந்த 45 வயது ரிச்சர்ட் அலெக்சாண்டர் கலனுக்கு அனைத்து வகை வாகனங்கள் ஓட்ட ஐந்தாண்டு தடையும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து அவர் விடுதலையானதும் இந்தத் தடை நடப்புக்கு வரும்.
இரு விபத்துகளும் கடந்த ஆண்டு ஒரே நாளில் நிகழ்ந்தன. அவற்றில் ஒன்றில் ஒருவருக்கு முதுகு எலும்பு முறிந்தது. சாலைப் போக்குவரத்து சட்டத்தின்கீழ் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை பிரிட்டனைச் சேர்ந்தவரான கலன் ஒப்புக்கொண்டார். அவற்றில் நியாயமாக இருக்க வேண்டிய கவனம் இன்றி வாகனம் ஓட்டியது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
கடந்த ஆண்டில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படும் முதல் நபராவார் கலன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கலன் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அடுத்த நாள் காலை 9.15 மணி அளவில் ஆர்ச்சர்ட் பொலிவார்ட்டில் 'பிக் அப்' வேனை அவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது கிரேஞ் சாலையில் உள்ள சாலைச் சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் சிவப்பாக மாறியது. கலன் ஓட்டிய வாகனம் 52 வயது திருவாட்டி டேங் லீ லீ ஓட்டிக்கொண்டிருந்த தனியார் வாடகை காரின் பின் வலது பக்கம் மீது மோதியது.
இதையடுத்து, கலனிடம் விவரங்களைக் கேட்டுக் குறித்துக்கொள்ள தமது காரைவிட்டு வெளியே வந்தார் திருவாட்டி டேங். ஆனால் தமது வாகனத்தைவிட்டு வெளியேறுவதற்குப் பதிலாக போக்குவரத்து விளக்கு பச்சை நிறமானதும் அங்கிருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார் கலன்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டாவது விபத்து ஐந்து நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. தங்ளின் சாலையில் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் தமது வாகனத்தை வேகமாக ஓட்டிய கலன், ஆர்ச்சர்ட் சாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதினார்.
இதில் அந்த இன்னொரு காரை ஓட்டிக்கொண்டிருந்த 32 வயது டாக்டர் கெலப் லியோங் காயமுற்றார். கலனின் கார் தம்மை நோக்கி வருவதைப் பார்த்த டாக்டர் லியோங் பிரேக்கை அழுத்தினார். ஆனால் கலனின் கார் அவரது காரின் மீது மோதியது. காயமடைந்த டாக்டர் லியோங் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு முதுகு எலும்பில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு 48 நாட்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

