கொரோனா கிருமித்தொற்று; இதுவரை ஒன்பது பேர் பலி

கொரோனா கிருமித்தொற்று; இதுவரை ஒன்பது பேர் பலி

1 mins read
554eb6af-dba2-4efe-bc27-9e4e303a397f
எஸ்11 டார்மிட்டரி@பொங்கோல் -

சிங்கப்பூரில் புதிதாக மேலும் 386 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் 280 சம்பவங்கள், ஏற்கெனவே அறியப்பட்டுள்ள நோய்ப்பரவல் குழுமங்களுடன் தொடர்புடையவை. இந்தச் சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 2,918 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக இந்நோயைத் தொற்றியவர்களில் பெரும்பாலானோர் தங்குவிடுதிகளில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இக்கிருமித்தொற்றால் மற்றொருவர் உயிரிழந்ததாகவும் அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இறந்தவர் 65 வயது சிங்கப்பூர ஆடவர்.

ஏப்ரல் 9ஆம் தேதியன்று இந்நோய் இவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கூ டெக் புவாட் மருத்துவமனை இந்த ஆடவரின் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்11 டார்மிட்டரி@பொங்கோலில் மேலும் 222 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிங்கப்பூரில் ஆகப் பெரிய நோய்ப்பரவல் குழுமமான இந்த இடத்தில் இதுவரை 586 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் நான்கு நோய்ப்பரவல் குழுமங்கள் அடையாளப்படுத்தப்படுள்ளன. காக்கி புக்கிட் கிரெசண்டிலுள்ள சிட்டிவால் என்ற நிறுவனம், ஜாலான் குபோரிலுள்ள ஏபிசி ஹாஸ்டல், டெக் பார்க் கிரெசண்ட் ஊழியர் தங்குவிடுதி, கிராஞ்சி தங்குவிடுதி ஆகியவை அவை.

திங்கட்கிழமையில் மேலும் 26 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களுடன் இந்நோயிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 586க்கு உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் தற்போது தங்கியுள்ள 1,158 நோயாளிகளில் 29 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.