வெளிநாட்டு ஊழியர்கள் 5,000 பேருக்கு பரிசோதனை

வெளிநாட்டு ஊழியர்கள் 5,000 பேருக்கு பரிசோதனை

2 mins read
bf48936a-6656-4e85-90a5-200c6a5becf6
ஏப்ரல் 13ஆம் தேதியன்று புதிய கொவிட்-19 நோய்ப்பரவல் இடமாக அடையாளம் செய்யப்பட்டுள்ள டெப் பார் கிரெசண்ட் ஊழியர் தங்கும் விடுதி. படம்: திமத்தி டேவிட் -

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு பிற ஊழியர்களிடம்இருந்து பிரிக்கப்படுவதாக கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்ளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்திருக்கிறது. இந்நோய்க்கான அறிகுறி இல்லாதவர்கள் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தால் அவர்களும் சோதிக்கப்படுவர் என்றும் இந்தக்குழு கூறியது.

அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் உடல்நிலை சீராக உள்ள 7,000 ஊழியர்கள் தங்களது தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு ராணுவ முகாம்கள் உள்ளிட்ட மற்ற இருப்பிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் இக்குழு தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள இந்நிலையில் இந்தப் பணிக்குழு, அண்மைய நாட்களாக எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி விவரித்தது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் என அறிவிக்கப்பட்ட ஊழியர் தங்கும் விடுதிகளிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்குக் கடந்த வாரயிறுதியில் சோதனை செய்யப்பட்டது. அத்துடன் அடுத்த சில நாட்களில் கூடுதலாக சுமார் 5,000 ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர் என்று அது கூறியது.

"இக்கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களைக் கண்டுபிடிப்பதில் கடப்பாடு கொண்டுள்ளோம். இவர்களை எந்தக் கவனிப்புமின்றி தனியாக விட்டுவைக்க நினைக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம்," என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளின் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்தார்.

இந்நோய்க்கான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாத அல்லது குறைந்த அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தும் ஊழியர்களைப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெறுவதாக இணைப் பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

"சில விடுதிகளில், நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களை ஆராயும் பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். உதாரணத்திற்கு அவர்கள், ஒரே அறையைப் பகிரும் சக ஊழியர்களாக இருக்கக்கூடும். அத்தகைய தங்குமிட சூழலில் வாழ்வதால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாகக் கருதப்படுகிறது.

"வெவ்வேறு சூழல்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரை நாங்கள் சோதனை செய்திருக்கிறோம். ஊழியர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றும்போது அந்த இடங்களும் நோய்ப்பரவல் இடங்களாக மாறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்திருக்கிறோம்," என்றார் இணைப் பேராசிரியர் மாக்.