கொவிட்-19 கிருமித்தொற்று குறித்த காணொளி உரையை ஆற்ற தமது வேண்டுகோளை ஏற்ற தமிழ்த்திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். இவை திரு ரஜினிகாந்தின் தனிப்பட்ட பாணியில் சொல்லப்பட்ட மனமார்ந்த வார்த்தைகள் என்று திரு ஈஸ்வரன், இன்று ( ஏப்ரல்14ஆம் தேதி) இரவு வெளியிட்ட தம் பதிவில் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்தப் புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமையவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தமது காணொளி உரையைத் தொடங்கிய திரு ரஜினிகாந்த, கொரோனா கிருமிப்பரவலால் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வாழ் தமிழக மக்கள், அவரவர் இருக்கும் நாடுகளில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்றும்படி திரு ரஜினிகாந்த தம் உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இதுதான் உங்கள் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் நீங்கள் கொடுக்கும் பரிசு. உங்களைப் பிரிந்து வாழும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சதா நேரமும் உங்களைப் பற்றிதான் சிந்தனை, உங்களைப் பற்றிதான் கவலை," என்று அவர் கூறினார்.

