சிங்கப்பூர் சென்ற ஆண்டு ஏறக்குறைய மூன்று மில்லியன் டன் குப்பைக்கூளங்களை செமாகாவ் நிலப்பரப்பிற்கு அனுப்பியது. சிங்கப்பூரில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு எஞ்சியிருக்கும் ஒரே நிலப்பரப்பு புலாவ் செமாகாவ்தான். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் சுமார் 30 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள். இவை அங்குள்ள எரி ஆலையில் எரிக்கப்பட்டன.
விரயமான உணவுப்பொருட்கள் குப்பைக்கூளங்களில் 20 விழுக்காடு அளவுக்கு இருந்தன. காகிதம் மற்றும் அட்டைப்பெட்டிகள் 11 விழுக்காடு அளவுக்கு இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது.
'2019 விரயப்பொருட்கள் புள்ளி விவரமும் ஒட்டுமொத்த மறு சுழற்சியும்' என்ற வாரியத்தின் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றன.
சிங்கப்பூரில் திரண்ட குப்பைக்கூளங்கள், அவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட விவரங்கள் முதலான பலவும் அந்த வருடாந்திர அறிக்கையில் அடங்கி இருக்கின்றன.
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் சிங்கப்பூரில் குப்பைக்கூளங்கள் 6 விழுக்காடு குறைந்து இருக்கின்றன.
ஒட்டுமொத்த மறுசுழற்சி விகிதம் 2018ல் 61 விழுக்காடாக இருந்தது. இது சென்ற ஆண்டில் 59 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.
உள்ளூர் மறுசுழற்சி விகிதம் 2018ல் 22 விழுக்காடாக இருந்தது. சென்ற ஆண்டு 17 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. அதேவேளையில், வெளி மறுசுழற்சி விகிதம் 75 விழுக்காட்டிலிருந்து 73 விழுக்காடாகக் குறைந்தது.
செமாகாவ் நிலப்பரப்பில் கொட்டப்படும் குப்பைக்கூளங்களின் அளவை 2030ல் 30 விழுக்காடு குறைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கு.
இதற்காக சென்ற ஆண்டு 'விரயமில்லா பெருந்திட்டம்' என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.
செமாகாவ் நிலப்பரப்பின் கொள்ளளவை 2035க்குப் பிறகும் நீட்டிப்பதும் அந்தத் திட்டத்தின் நோக்கம்.
குப்பைக்கூள பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கத்தில் சிங்கப்பூர் 70 விழுக்காட்டு மறுசுழற்சி என்ற தேசிய அளவை நிர்ணயித்து இருக்கிறது.
இந்நிலையில் சென்ற ஆண்டு குப்பைகள் குறைந்ததற்குக் காகிதங்களின் மறுசுழற்சியே காரணம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

