இணைய சேவை விட்டுவிட்டு துண்டிக்கப்படும் பிரச்சினையை ஸ்டார்ஹப் நிறுவனம் எதிர்கொண்டு வருவதால் வீட்டிலிருந்த படி வேலை செய்யும், கற்கும் அதன் சேவையாளர்கள் இடையூறுகளைச் சந்தித்தனர்.
இதனை ஸ்டார்ஹப் நிறுவனமும் தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டமைப்புச் சாதனத்தில் பழுது ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக நேற்றுக் காலை வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களில் சிலர் கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை சேவைகளில் தற்காலிக பாதிப்பை எதிர்கொண்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 20 நிமிட நேரம் சேவை பாதிப்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மாற்றுச் சாதனம் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியதாகவும் அந்நிறுவனம் கூறியது.
பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு வெளியிட்ட பதிவு ஒன்றில், இன்னும் சில வாடிக்கையாளர்கள் இணைய சேவை பிரச்சினையைச் சந்தித்து வருவதாகவும் ஸ்டார்ஹப் தெரிவித்தது.
"பிரச்சினை குறித்து விசாரித்து வருகிறோம். கூடிய விரைவில் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்," என்று அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
இணைய சேவை துண்டிப்பு குறித்து கணக்கெடுக்கும் 'டௌன் டிடெக்டர்' இணையத்தளம், நேற்றுக் காலை 11 மணியளவில் ஸ்டார்ஹப் இணைய சேவை பிரச்சினை தொடங்கியதாகவும் 11.30 மணி, பிற்பகல் 3.55 மணிக்கு அது தொடர்பான புகார்கள் உச்சத்தில் இருந்ததாகவும் தெரிவித்தது.
இது குறித்து சமூக ஊடகங்கள் வழியாகவும் பலர் புகார் கூறியிருந்தனர்.

