பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தால் 28 நிறுவனங்களுக்கு அபராதம்

பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தால் 28 நிறுவனங்களுக்கு அபராதம்

2 mins read
17e6c65b-d1d8-4921-8902-4fbfe840d9b3
ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலிசார் லாரியை நிறுத்தி பாதுகாப்பான இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைச் சோதனை செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழியர்களை லாரிகளில் அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தால் 28 முதலாளிகளுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து போலிஸ் ஆகியவற்றின் அதிகாரிகள் தீவெங்கும் நடத்திய சோதனையில் பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை மீறிய சில லாரிகள் சிக்கின.

இந்தக் குற்றத்தைப் புரியும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் லாரி ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. இது இன்றிலிருந்து நடப்பு வந்துள்ளது.

மேலும் நான்கு முதலாளிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

லாரிகளில் பயணம் செய்யும் ஊழியர்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளியைப் பல நிறுவனங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறிய மனிதவள அமைச்சு, இந்த விதிமுறையை இதுவரை பின்பற்றாத நிறுவனங்கள் அதை உடனடியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் இருக்கும்வரை அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை இரட்டிக்கப்படும்.

இதற்கிடையே, கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறையை மீறியதற்காக லாவென்டர் ஸ்திரீட்டில் உள்ள கேப் யர் விடுதிக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விடுதியிலிருந்து வெளியே செல்பவரின் விவரங்களை அந்த விடுதி குறிப்பெடுக்கவில்லை.

பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்யாத குற்றத்துக்காக லோட் ஒன் கடைத்தொகுதியில் உள்ள நாசி லமாக் கடையான கிரேவ்வுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து அத்தியாவசிய சேவைகள் வழங்காத 13 கடைகள் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்