தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நிவாரண நிதி வழங்கீட்டைத் திரும்ப ஒப்படைக்க விரும்புவோர் அதை இணையம் வழியாகவும் செலுத்தலாம் அல்லது தங்களுக்கு அனுப்பப்பட்ட காசோலைகளை அல்லது காசாளர் ஆணையை சமூக சேவை அலுவலகங்களில் ஒப்படைக்கலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக தங்கள் வேலையையும் வருமானத்தையும் இழந்த குறைந்த வருமான மற்றும் நடுத்தர வருமான சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் $500 ரொக்க மானியம் வழங்கப்பட்டது.
"இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து இம்மானியத்துக்கு 300,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், துணைப் பிரதமர் ஹெங், வேலை ஆதரவுத் திட்டம் பற்றி அறிவித்த பிறகு தாங்கள் பெற்ற $500 ரொக்கத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்புவதாக பலர் அமைச்சின் காம்கேர் நேரடித் தொலைபேசி எண்ணை அழைத்து தெரிவித்தனர்," என்று திரு லீ கூறினார்.
திரும்ப ஒப்படைக்கப்படும் தொகை இந்த இக்கட்டான நேரத்தில் சிரமப்படும் மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தப் படும் என்றும் இதன் தொடர்பில் அமைச்சின் காம்கேர் நேரடித் தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டாம் என்றும் அமைச்சர் சொன்னார்.

