சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் போரிடுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தக்கூடிய ஐந்து பலவீனங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
1) தங்கும் விடுதிகள் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் விடுதிகளில் தங்குகின்றனர். ஒரே இடத்தில் பலர் தங்குவதால் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது சவால்மிக்கது என்று கூறப்படுகிறது. தங்குமிடங்கள், தூங்குமிடங்கள் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்படுவதால் கொரோனா கிருமி மின்னல் வேகத்தில் பரவும் அபாயம் உள்ளது. அண்மையில், விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதே இதற்குச் சான்று. கட்டப்பட்டுள்ள 43 விடுதிகளில் 19 விடுதிகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழுமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு 2,000க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இந்த 19 குழுமங்களில் 12 குழுமங்கள் தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் அனைத்து ஊழியர்களும் அவர்களது ஒறைகளில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
2) முதியோர் இல்லங்கள் கொரோனா கிருமித்தொற்றால் முதியோருக்கு அதிகம் ஆபத்து இருக்கிறது. இந்நோயின் காரணமாக சிங்கப்பூரில் மாண்ட பத்து பேரும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். லீ ஆர் மூய் முதியோர் இல்லம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழுமமாகும். அங்கு வசிக்கும் 16 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு வசித்த இருவர் மாண்டனர். மாண்ட இருவரும் அந்த இல்லத்தில் வசித்த 86 வயது மூதாட்டிகள்.
3) விதிமுறைகளை மீறுபவர்கள் பாதுகாப்பான இடைவெளி விடாமல் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களால் கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு சாஃப்ரா ஜூரோங்கில் நடைபெற்ற இரவு விருந்து ஓர் உதாரணம். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் அந்த விருந்தில் கலந்துகொண்டதை அடுத்து அடுத்தடுத்து 47 பேர் நோய்வாய்ப்பட்டனர். ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருடன் மட்டுமே நேரடித் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில், வெளியில் சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும். தங்களுடன் வசிக்காத குடும்பத்தினர்களையும் தங்கள் வீட்டிற்கு அழைக்கக்கூடாது. கிருமிப் பரவலைத் தடுக்க முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வோர், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியாதவர்கள் ஆகியோரால் கொரோனா கிருமி பரவும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. பொதுமக்கள் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டத்துக்கு உட்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு நாளும் 3,000 அமலாக்க அதிகாரிகளும் எஸ்ஜி சுத்தம், சுகாதாரப் பாதுகாப்பான இடைவெளி தூதர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
4) குழந்தை பராமரிப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகள் உலகளாவிய நிலையில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்கள் மூலம் அவர்கள் வீட்டில் இருக்கும் முதியவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இரண்டு குழுமத்தில் 30 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் எட்டு சிறுவர்கள் 32 பெரியவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஃபெங்ஷான் புளோக் 126ல் இருக்கு ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் 27 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் பெரியவர்கள், நான்கு பேர் சிறுவர்கள். இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து குழந்தை பராமரிப்பு நிலையங்களும் பாலர் பள்ளிகளும் அவை பொதுவாக வழங்கும் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அத்தியாவசியச் சேவைத் துறைகளில் பணிபுரியம் பெற்றோரின் பிள்ளைகள் மட்டும் அங்கு பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
5) வேலையிடங்கள் அத்தியாவசிய சேவைத் துறையின்கீழ் வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதன்வழி, மேலும் பலர் வீட்டிலேயே இருக்கலாம், இதனால் கொரோனா கிருமிப் பரவல் குறையும். தொடர்ந்து இயங்கி வரும் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழியர்கள் வெவ்வேறு நேரங்களில் வேலை செய்வது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது, முகக்கவசங்கள் அணிவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

