நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் வேலையில் அமர்த்தி இருக்கும் ஓர் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஊழியர்களில் இரண்டு பேர் ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கும் இடையில் இணைய இணைப்பு வேலைகளுக்காக 34 வீடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள் என்று நெட்லிங்க் டிரஸ்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இதர இரண்டு ஊழியர்களும் அந்தப் பணியில் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை என்றும் அது கூறியது. அந்த நான்கு ஊழியர்களும் கடந்த 14 நாட்களில் நெட்லிங்க் நிறுவன ஊழியர்கள் யாரோடும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.
அந்த நால்வருக்கும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையில் கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நான்கு ஊழியர்களும் தொடர்புகொண்டிருக்கக்கூடிய எல்லாரையும் கண்டுபிடிக்க சுகாதார அமைச்சு எடுக்கும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் தான் அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் நெட்லிங்க் குறிப்பிட்டு உள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த ஆண்டு ஜனவரி முதலே நெட்லிங்க் நிறுவனமும் அதன் ஒப்பந்த நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதன் தொடர்பில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் தான் ஆலோசித்து இருப்பதாகவும் அந்த ஊடகத்தின் உத்தரவுக்கு இணங்க வீடுகளுக்கு அல்லது அலுவலகங்களுக்குச் சென்று பார்க்கக்கூடிய எல்லா பணிகளையும் தற்காலிகமாக தான் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் நெட்லிங்க் குறிப்பிட்டு உள்ளது.

