வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகளில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 கிருமிப் பரவலுக்கும் ஊழியர்களின் தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைக்கும் தொடர்புள்ளதாக வாசகர் எழுதிய கடிதம் ஒன்று 'சாவ்பாவ்' நாளிதழில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. குறிப்பிட்ட ஒரு சாராருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதாக கடிதம் உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இங்கு வெளிநாட்டு ஊழியர் களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று ஏன் ஏற்பட்டது என்பதற்கான புரிந்துணர்வு அக்கடிதத்தில் இல்லை என்று அவர் கூறினார்.
நாளிதழுக்குக் கடிதம் எழுதியிருந்த வாசகர் லீ ஷிவான், தங்கும் விடுதிகளில் கிருமிப் பரவல் ஏற்படுவதற்கு வெளிநாட்டு ஊழியர்களே காரணம் என்றும் ஒன்றாகக் கூடிக்கொண்டு தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணாமல் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்தங்கிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் 'கைகளால் சாப்பிடுவது, மரத்தடியில் சாப்பிடுவது' போன்ற பழக்க வழக்கங்களையும் கொண்டுவருவதாக வாசகர் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாக நாட்டின் கிருமித்தொற்று சம்பவங்களில் பெரும்பான்மை தங்கும் விடுதிகளில் ஏற்படும் சம்பவங்களாக உள்ளன. எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் பதிவாகி வருகின்றன. வெளிநாட்டு ஊழியர்கள் சமூகச் சூழலில் வசிப்பதால் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கின்றனவே தவிர ஒருவரது தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் அல்ல என்று 'சாவ்பாவ்' சீன செய்தித்தாளிடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
"பலரையும் ஒரே இடத்தில் வசிக்கச் செய்து, ஒரே அறையில் உறங்கவிட்டு, கூட்டுச் சமையலில் ஈடுபடச் செய்து, நீண்ட நேரத்திற்கு அருகருகே இருக்க விட்டால், கிருமித்தொற்று பெருமளவில் ஏற்படுவது நிச்சயம். வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கிருமித்தொற்று ஏற்படுவது போன்றதுதான் அது," என்றார் அமைச்சர்.
அத்துடன் ஒருவரையொருவர் குறைகூறாமல் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க சிங்கப்பூரர்கள் ஒன்றாகத் திரண்டு வரவேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமான பணிகளில் வெளிநாட்டு ஊழியர் களின் பங்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரர்கள் கனிவன்பு, கருணை, தாராள குணமுடையவர்கள் என்று கூறிய அமைச்சர் சண்முகம், "கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டதைக் காட்டிலும் நாம் சிறந்த, மேலான பண்புகள் உடையவர்கள்," என்றார்.

