அறநிறுவனங்களுக்காக நிதி திரட்ட, 2012ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் சிங்கப்பூர் இந்தியர் டாக்டர் குமரன் ராசப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் டான் டோக் செங் மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெளிநாட்டு ஊழியர்களின் கொவிட்-19 கிருமித்தொற்று நில வரத்தின் தொடர்பில் காணொளி ஒன்றை உருவாக்க உதவியுள்ளார்.
காணொளியில் கொவிட்-19 கிருமித்தொற்று எப்படி பரவுகிறது என்று விளக்கம் அளித்துள்ள டாக்டர் குமரன், அக்கிருமியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உத்திகளையும் பகிர்ந்துகொண்டார்.
உடல்நலம் சரியில்லை என்றால் ஊழியர்கள் தாங்கள் தங்கும் விடுதியின் அதிகாரியிடம் உதவி நாட முன்வருமாறு அவர் அதில் கேட்டுக்கொண்டார்.
"கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனை செய்து கொள்ள முன்வாருங்கள், சுகாதார ஊழியர்களாகிய நாம் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வோம் என்ற செய்தியை இந்திய வெளிநாட்டு ஊழியர்களிடம் வலியுறுத்துவதே இக்காணொளியின் நோக்கமாகும்," என்று தெரிவித்தார் டாக்டர் குமரன்.
தமிழ், ஆங்கில மொழிகளில் வெளிவந்துள்ள இக்காணொளி, மனிதவள அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வியாழக் கிழமையன்று பதிவேற்றம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
இதன் தொடர்பில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிண்டா, இந்து அறக்கட்டளை வாரியம் போன்ற அமைப்புகளும் இந்தக் காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களின் மற்ற தாய்மொழிகளில் இதுபோன்ற காணொளிகளை வெளியாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று டாக்டர் குமரன் கூறினார்.

