இனவாத கருத்துகளுக்காக ஆடவர் மீது விசாரணை

1 mins read
1e867119-60e4-470d-9a9f-7dfce8bac15a
(படம்: திமத்தி டேவிட்) -

கொவிட்-19 கிருமித் தடுப்பு தொடர்பில் இங்கு பல்வேறு நடவடிக்கைகள் நடப்பில் இருக்க, அவற்றை மீறும் வகையில் 52 வயது ஆடவர் ஒருவர் நடந்துகொண்டுள்ளார். நடப்பில் உள்ள நடவடிக்கைக்கு எதிராக நடந்துகொண்டதுடன் ஆடவர் இனவாத கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

சென்ற வெள்ளிக்கிழமையன்று மாலை ஆறு மணியளவில் ஆடவர் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 61, புளோக் 651ல் அமைந்துள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றார். கடையில் ஆடவர் சோயா பால் வாங்க முயன்றதாக போலிசார் கூறினர். முகக்கவசம் அணியாததால் அவர் கடைக்குள் வரவும் பொருளை வாங்கவும் கடைக்காரர் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த ஆடவர் உடனே இனவாத வார்த்தைகளையும் தகாத சொற்களையும் கடைக்காரரை நோக்கிச் சொல்லத் தொடங்கினார். அத்துடன் கொவிட்-19 கிருமித்தொற்று பரவலுக்கு சீனர்களே காரணம் என்றும் கூச்சலிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாக வலம் வந்ததை அடுத்து போலிசாருக்குப் பல புகார்கள் கிடைத்தன. பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் மூன்று மணி நேரத்திற்குள் ஆடவரை அடையாளம் கண்டு அவர் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.