கிருமிப்பரவலால் அதிக அபாயத்தை எதிர்நோக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'மாஸ்க்-ஃபோர்ஸ்' என்ற திட்டத்தின்கீழ் 650,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாளை முதல் முகக்கவசங்களுடன் தகவல் கையேடுகளும் விநியோகம் செய்யப்படவுள்ளன.
இதற்காக வெளிநாட்டு ஊழியர் நிலையம் (Migrant Workers' Centre) தங்கும் விடுதி நடத்துநர்களுடன் இணைந்து செயல்படும் என்று தெமாசெக் அறக்கட்டளை தெ ரிவித்துள்ளது. தொடர்பு தகவல் அமைச்சு மற்றும் கலாசார அமைச்சுக்கான துணையமைச்சர் சிம் ஆன் தொடங்கிய இந்தத் திட்டத்திற்கு இதுவரை 2 மில்லியன் வெள்ளி நன்கொடை கிடைத்துள்ளது.
வெ ளிநாட்டு ஊழியர்களின் நலனில் சிங்கப்பூரர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதைக் கண்டு மனநிறைவு அடைவதாக திருவாட்டி சிம் ஆன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"சாலைகளைச் சீர்செய்வது, கட்டடங்களை க் கட்டுவது, துப்புரவுத் தொழில் உள்ளிட்ட பல பணிகளின்மூலம் அவர்கள் நம் நாட்டிற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். நமக்காக உழைக்கும் அவர்களுக்கு நாம் உதவிசெய்யவேண்டும். கிருமிப்பரவலை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்த்துப் போரிடுவதால் இவர்களுக்கு உதவி செய்ய இதைவிடவே று நல்ல நேரம் இருக்க முடியாது," என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

