கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குச் சில நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இக்காலகட்டம் விவாகரத்தான பெற்றோர்களுக்கு மிகச் சவால்மிக்கதாக அமைந்துள்ளது. தங்களின் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் செய்துகொண்ட ஏற்பாடு தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு முன்னரே கூறியிருந்தது.
பிள்ளைகள் தாயார் அல்லது தந்தையின் வீட்டில் மாறி மாறி வசிப்பது போன்ற ஏற்பாடு இதில் அடங்கும். ஆனால் இத்தகைய மாற்றங்களை முடிந்தவரை குறைந்தபட்சமாக வைத்திருப்பதுடன் முடிந்தால் வெவ்வேறு வீடுகளுக்குக் கிருமித்தொற்று பரவக்கூடிய சாத்தியத்தைக் குறைக்க முயற்சி செய்யவும் அமைச்சு ஆலோசனை கூறியிருந்தது.
"கொவிட்-19 சூழல் இல்லாத போதே பிள்ளைகளைப் பார்க்க முடிவது ஒரு சிக்கலாக இருந்து வருகிறது. பொதுவாக பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் பொறுப்பு தாய்மார்களுக்குத் தரப்படுவதால் பல தந்தைமார்கள் இந்த ஒரு மாத காலத்தில் தங்களின் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் அதிருப்தி அடையப் போகிறார்கள்," என்றார் குடும்ப விவகார வழக்கறிஞர் திரு ராஜன்.
விவாகரத்தான ஒரு சிலர் தங்களின் முன்னாள் துணைவருடன் செய்துகொண்ட ஏற்பாடுகளின்படி பிள்ளையை வெளியிடத்தில்தான் சந்தித்துப் பேச முடியும். தற்போதைய கிருமித் தடுப்பு நடவடிக்கைகளால் அதுவும் சற்று சவால்மிக்கதாகி உள்ளது.
இந்நிலையில் பெற்றோர்கள் திறன்பேசிகளில் காணொளி வழி உரையாட முயலலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பெற்றோர் இருவரும் ஒத்துழைப்பதுடன் தங்களின் பிள்ளைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளிலும் விவேகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடும்ப நீதிமன்றம் நினைவுறுத்துகிறது.

