பாதுகாப்பான இடைவெளி தொடர்பான விதிமுறைகளுடன் உடன்படாத கிட்டத்தட்ட 240 பேருக்கு ஆளுக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டுக்கு வெளியே முகக்கவசம் அணியத் தவறிய 120 பேருக்கும் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற 200 பேர் தவறியதாகவும் 80 பேர் வெளியே முகக்கவசம் அணியவில்லை என்றும் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிய பத்து பேருக்கும் அதிகமானோருக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
பல்வேறு சந்தைகளில் நீண்ட வரிசை இருந்ததாக திரு ஸுல்கிஃப்லி கூறினார். "உதாரணத்திற்கு இன்று காலை, கேராங் செராய் சந்தையில் சுமார் 200 பேர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சந்தைக்குள் செல்வதற்காகக் காத்திருக்கவேண்டிய சராசரி நேரம் குறைந்தது 30 நிமிடங்கள்," என்று அவர் கூறினார். "தேக்கா சந்தையில் மக்கள் வரிசை இல்லை. அத்துடன் 505 ஜூரோங் வெஸ்ட் சந்தையில் அவ்வளவு பேர் வரிசை அதிக நேரத்திற்கு நிற்கவில்லை. பத்து நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் அவர்களால் சந்தைக்குள் நுழைய முடிந்தது," என்றும் அவர் தம் பதிவில் குறிப்பிட்டார்.
கவனத்தை சற்று நேரம் சரியவிட்டாலும்கூட புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுவும் உருவாகலாம் என அவர் எச்சரித்தார்.

