சிங்கப்பூரர் மீது இனவெறித் தாக்குதல்

சிங்கப்பூரர் மீது இனவெறித் தாக்குதல்

2 mins read
3a000ea1-8cea-4571-843d-27c926688096
-

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சிங்கப்பூர் இளம்பெண் ஒருவரும் அவருடைய மலேசியத் தோழியும் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது. பட்டப் படிப்பு பயின்று வரும் அந்த 18 வயது சிங்கப்பூர் மாணவியும் அவருடைய 20 வயது நண்பரும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

இனவெறித் தாக்குதலாக நம்பப்படும் இந்தச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவ நாளன்று மாலை 5.30 மணியளவில் அவ்விருவரும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோது குவீன் விக்டோரியா சந்தை அருகே சந்தேகப் பேர்வழிகள் இருவர் அவர்களை வழிமறித்து வசைபாடி அடித்து உதைத்தனர்.

காக்கேசிய இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படும் அந்தத் தாக்குதல்காரர்கள் இருவரும் சிங்கப்பூரரையும் அவருடைய நண்பரையும் நோக்கி 'கொரோனா கிருமி' எனத் திரும்பத் திரும்ப கத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விக்டோரியா மாநில போலிசார் தெரிவித்தனர். அத்துடன், 'சீனாவிற்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று அவர்களை நோக்கிச் சொன்னதாகவும் அதற்குப் பதிலளித்தபோது அவ்விருவரும் தாக்கப்பட்டதாகவும் மெல்பர்னின் 'நைன் செய்தி' தெரிவித்தது.

தாக்குதலில் அவ்விருவரும் இலேசான காயமடைந்ததாகக் கூறப்பட்டது. இத்தாக்குதலுக்கு அம்மாணவிகள் பயிலும் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் மெல்பர்ன் நகர மேயரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதலின்போது மாணவி ஒருவரின் காதணிபாடிகள் (AirPods) கீழே விழுந்துவிட்டதாகவும் அவற்றை அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மெல்பர்னைச் சேர்ந்த 21 வயதுப் பெண் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக போலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அந்தப் பெண் வேறொரு வழக்கில் பிணை பெற்று வெளியில் இருக்கும்போது இப்படி இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இன்னொரு பெண்ணையும் அவர்களுடன் இருந்த ஆடவர் ஒருவரையும் அடையாளம் காணும் முயற்சியை போலிசார் மேற்கொண்டுள்ளனர். அந்தக் காணொளியில் அவர்கள் இருவரும் தென்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவிக்கு உதவுவதற்காக கேன்பராவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்தச் சம்பவம் குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யும் வகையில் உள்ளூர் அதிகாரிகளையும் சிங்கப்பூர் தூதரகம் தொடர்புகொண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.