சிங்கப்பூரில் மோட்டார் வாகன விற்பனை, அழகுப் பராமரிப்புச் சேவை உள்ளிட்ட சில தொழில்துறைகளில் இயங்கிய வர்த்தகங்கள் தங்களது செயல்பாடுகளைத் திடீரென மூடியதால் கடந்த ஆண்டு அந்த நிறுவனங்களிடம் தாங்கள் செலுத்திய $2.37 மில்லியன் முன்பணத்தைப் பயனீட்டாளர்கள் இழந்தனர்.
பயனீட்டாளர்கள் இத்தகைய பெரிய அளவிலான தொகையை இழந்திருப்பது தனக்குக் கவலை அளிப்பதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளியல் நிலவரத்தின்படி, தாங்கள் செலுத்திய முன்பணத்தைப் பயனீட்டாளர்கள் இழக்கும் போக்கு தொடரக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு மோட்டார் கார் துறைக்கு எதிராக ஆக அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதாக பயனீட்டாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மோட்டார் கார் துறைக்கு எதிராக கடந்த ஆண்டு 1,683 புகார்கள் அளிக்கப்பட்டன. அத்துறைக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் பதிவான 1,802 புகார்களுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை குறைவு.
கார் துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட பத்தில் நான்கு புகார்கள், குறைபாடு உடைய பழைய கார்கள் தொடர்பிலானவை. கார் துறைக்கு அடுத்த நிலையில் வந்த அழகுப் பராமரிப்புத் துறைக்கு எதிராக கடந்த ஆண்டு 1,598 புகார்கள் பெறப்பட்டன.அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் ஒப்பந்ததாரர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல், அறைகலன் துறைகள் வந்தன.
கடந்த ஆண்டு பயனீட்டாளர் சங்கம் மொத்தம் 14,867 புகார்களைப் பெற்றது. 2018ல் பதிவான 16,090 புகார்களுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை குறைவு. இவற்றில், பயனீட்டாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் பத்தில் ஏழு புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. இதில் ரொக்கமாகவோ பொருள், சேவை மூலமாகவோ கிட்டத்தட்ட $2.6 மில்லியன் மீட்கப்பட்டது.
பொருள், சேவை வழங்குவதற்கு முன்பாக பயனீட்டாளர்களிடமிருந்து தொழில் நிறுவனங்கள் முன்பணம் பெற்றுக்கொள்வது வழக்கம். மேற்கூறப்பட்ட தொழில்துறைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது வழங்கப்படும் சேவைகள் விலை மதிப்புமிக்கவை என்பதால் பயனீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் தொகை பெரிய அளவிலானது என்று பயனீட்டாளர் சங்கம் கூறியது. பயனீட்டாளர்கள் இவ்வளவு பெரிய அளவிலான தொகையை இழந்திருப்பது தனக்குக் கவலையளிப்பதாகச் சொன்ன பயனீட்டாளர் சங்கம், தொழில் நிறுவனங்களிடம் முன்பணம் செலுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து பயனீட்டாளர்களுக்கு எடுத்துரைக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்தது.

