பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகளுக்கு உடன்பட மறுத்த 200க்கும் அதிகமானோர் அதிகாரிகளால் பிடிப்பட்டனர். அத்துடன், 80 பேர் வீட்டுக்கு வெளியே முகக்கவசங்களை அணியத் தவறினர்.
இவர்களில் ஒன்பது பேர் இரண்டாவது முறையாக விதிமுறைகளை மீறியதால் அவர்களுக்கு ஆளுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
"வீம்பாலும் பொறுப்பின்மையாலும் செய்யப்படும் செயல்களாக இச்செயல்கள் இருக்குமானால் இவை மற்றவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை மட்டுப்படுத்தும் விதத்தில் உள்ளன. அனைவரது பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக இருப்பதை எப்படி இவர்களுக்கு உணர்த்துவது?:" என்று திரு மசகோஸ் தமது பதிவில் குறிப்பிட்டார்.
கொவிட்-19 நோய் எவ்வளவு எளிதில் பரவக்கூடியது என்றும் திரு மசகோஸ் அந்தப் பதிவில் விளக்கினார். குறுகிய இடத்தில் அதிகம் பேர் கொண்ட சிங்கப்பூர் போன்ற நகரங்கள் எதிர்நோக்கும் அபாயத்தையும் அவர் சுட்டினார்.
இந்நோய் தொற்றிய ஒருவர் கண்காணிக்கப்படாமல் இருந்தால் அவர் மூலம் இது ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கு அதிகமானோருக்குப் பரவலாம் எனத் திரு மசகோஸ் தெரிவித்தார்.
"கொவிட்-19 நெருக்கடியின் முடிவை நாம்தான் ஒன்றாக உறுதி செய்யவேண்டும். வேறு எவரும் இல்லை." என்றும் அவர் கூறினார்.

