இவ்வாண்டு ஜனவரி, மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மின்னணுவியல் சாதனங்கள் சம்பந்தப்பட்ட இணைய வணிக மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $380,000ஐ இழந்தனர். அதே காலகட்டத்தில் இத்தகைய மோசடிகள் குறித்து போலிசிடம் குறைந்தது 531 புகார்கள் அளிக்கப்பட்டன.
மோசடிகள் தொடர்பான மின்னணுவியல் சாதனங்களில் கிட்டத்தட்ட பாதியளவு கைபேசிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் சாதனங்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவை எஞ்சிய சாதனங்களில் அடங்கும்.
இணையத்தில் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் விலை மதிப்பிலான மின்னணுவியல் சாதனங்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு போலிஸ் அறிவுறுத்துகிறது.
கடந்த ஆண்டு முன்னணி வகித்த மோசடிச் சம்பவங்களில் கடன் மோசடிகளும் இணைய வணிக மோசடிகளும் அடங்கும்.

