இவ்வாண்டு ஜனவரி, மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மின்னணுவியல் சாதனங்கள் சம்பந்தப்பட்ட இணைய வணிக மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $380,000 தொகையை இழந்தனர். அதே காலகட்டத்தில் இத்தகைய மோசடிகள் குறித்து போலிசிடம் குறைந்தது 531 புகார்கள் அளிக்கப்பட்டன.
மோசடிகள் தொடர்பான மின்னணுவியல் சாதனங்களில் கிட்டத்தட்ட பாதியளவு கைபேசிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு சாதனங்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவை எஞ்சிய சாதனங்களில் அடங்கும்.
இணையத்தில் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விலைமதிப்புள்ள பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு போலிஸ் அறிவுறுத்துகிறது.
கடந்த ஆண்டு முன்னணி வகித்த மோசடிச் சம்பவங்களில் கடன் மோசடிகளும் இணைய வணிக மோசடிகளும் அடங்கும்.
இணைய வணிக மோசடிச் சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு 'கரோசல்' தளத்தில் இடம்பெற்றுள்ளன என்று போலிஸ் தகவல் தெரிவித்தது.
இத்தகைய மோசடிச் சம்பவங்கள் குறித்து போலிசிடம் தகவல் அளிக்க 1800 255 0000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

