கொரோனா கிருமித்தொற்று பாதிப்பினால் தனியார் போக்குவரத்து செலவு, சேவை செலவுகள் போன்றவை குறைந்ததால், தொடர்ந்து இரண்டாவது மாதமாக மார்ச் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் சுருங்கியது.
கடந்த 2018ஆம் ஜனவரி மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக பயனீட்டாளர் செலவு குறைந்ததுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தங்குமிடம், தனியார் சாலைப் போக்குவரத்து செலவுகள் தவிர்த்த பயனீட்டாளர் விலைகள் கடந்த மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட 0.2 விழுக்காடு சரிந்தன.
இது பிப்ரவரி மாதத்தின் 0.1 விழுக்காடு சரிவைவிட அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக மூலாதார பணவீக்கம் பிப்ரவரி மாதம் பூஜ்ஜியத்துக்குக் கீழ் இறங்கியது.
பிப்ரவரியில் 0.3 விழுக்காடாக இருந்த அனைத்துப் பொருட்களின் பணவீக்கமும் மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பூஜ்ஜியம் நிலையை எட்டியது. அதாவது 2018 ஜனவரிக்குப் பிறகு முதல் தடவையாக ஒட்டுமொத்த பயனீட்டாளர் செலவு மிகக் குறைந்த அளவை எட்டின.
டாக்சி, தனியார் வாடகை வாகனங்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செலவுகள் குறைந்தன. அத்துடன் சுகாதார, விடுமுறைச் செலவினங்களில் பெரிய சரிவு தென்பட்டதால் சேவைகளுக்கான செலவு பெருமளவு குறைந்தது.
சேவைகளுக்கான ஒட்டுமொத்த செலவு, பிப்ரவரி மாதத்தின் 0.4 விழுக்காடு வீழ்ச்சியைவிட, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதத்தில் 0.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது, செங்குத்தானது.
பெட்ரோல் விலை, வாகன நிறுத்துமிட கட்டணம் ஆகியவை குறைந்து வருவதாலும், கார்களின் விலை சற்று அதிகரித்ததாலும் பிப்ரவரி மாதத்தின் 2.4 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது தனியார் போக்குவரத்துச் செலவுகள் மார்ச் மாதத்தில் 0.3% சரிந்தன.
உணவக உணவு, சமைக்காத உணவின் விலைகள் சிறிது உயர்ந்துள்ளதால், உணவு விலை கடந்த மாதத்தில் 1.5 விழுக்காடு உயர்வு கண்டது. பிப்ரவரியில் இது 1.6 விழுக்காடாக இருந்தது.
பொழுதுபோக்குப் பொருட்கள், மருத்துவத் தயாரிப்புகளுக்கான விலைச் சரிவு காரணமாக, சில்லறை மற்றும் பிற பொருட்களின் செலவுகள் பிப்ரவரி மாதத்தில் 1 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 0.9 விழுக்காடு மெதுவான சரிவைக் கண்டன.
பிப்ரவரி மாதத்தின் 7.4 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் மின்சாரம், எரிவாயு செலவினங்களின் சரிவு சற்று குறைந்து 6.2 விழுக்காடாக இருந்தது.
இது வீட்டு வாடகைகளின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தின் 0.4 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் தங்குமிடச் செலவுகள் 0.5 விழுக்காடு உயர்ந்தன.
கொரோனா கிருமித்தொற்று பரவல் வணிக நடவடிக்கைகளை முடக்கியதால் பயனீட்டாளர் விலைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், நாணய ஆணையம், இந்த ஆண்டுக்கான மூலாதாரப் பணவீக்கம், ஒட்டுமொத்த பயனீட்டாளர் விலை பணவீக்கம் -1 விழுக்காட்டிலிருந்து 0 விழுக்காடாகக் குறைத்தது.
பெட்ரோல் விலை நீண்ட காலத்திற்கு குறைந்து இருந்தால் எரிசக்தி தொடர்பான பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.
அதே நேரத்தில், கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துலக நடவடிக்கைகள் விநியோகத்தில் இடையூறுகளுக்கு வழிவகுத்தன. இதனால், இறக்குமதி செய்யப்பட்ட உணவு விலைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.
சிங்கப்பூரில் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளும் பலவீனமான ஊழியர் சந்தை நிலைமைகளும் பயனீட்டாளர் தேவையைக் குறைக்கும். இதனால் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை உயர்வு மட்டுப்படுத்தப்படலாம் என அறிக்கை குறிப்பிட்டது.

