சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் கொவிட்-19 தகவல்களைக் கசியவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி கைது, தற்காலிக பணிநீக்கம்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தினசரி தகவலைக் கசியவிட்டதாகவும், ஒரு கொவிட்-19 நோயாளி பற்றிய தகவல்களை அனுமதியின்றி எடுத்ததாகவும் சந்தேகிப்பதன்பேரில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளில் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான அந்த பொதுத்துறை ஊழியர் ஒரு சிங்கப்பூர் பெண்மணி. அவர் அலுவலக ரகசியங்கள் சட்டம் (OSA), கணினியைத் தவறாகப் பயன்படுத்துதல் சட்டம் ஆகியவற்றின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

போதிய தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதன் தொடர்பில் தற்போது மறுஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

“போலிஸ் விசாரணை தொடரும் இவ்வேளையில் அந்த அதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அவரால் இனி பயன்படுத்த முடியாது,” என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

“கொவிட்-19 நோயாளிகளைப் பற்றிய முக்கியமான தகவல்கள், பாதுகாக்கப்பட்ட கணினியில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தகவல்களை, பணியில் தேவைப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அத்தகைய தகவல்களை அந்த அதிகாரி தமது பணியில் பயன்படுத்தியதால் அத்தகவல்களைப் பார்க்கும் அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்தத் தகவலை அனுமதிக்கப்படாத மற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது," என்றது அறிக்கை.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விவரம் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் வெளியிடப்பட்டிருப்பதாக பொதுமக்களில் ஒருவர் இம்மாதம் 16ஆம் தேதி இரவு7.43 மணிக்கு புகார் அளித்ததாக நேற்று போலிசார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 16 அன்று கிருமித்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையான 728ஐ, தனிப்பட்ட ‘விசாட்’ சமூக ஊடகக் குழுவில் அந்த அதிகாரி பதிவு செய்திருந்தது முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அன்றைய கிருமித்தொற்று விவரத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே, அந்த சமூக ஊடகக் குழுவிலிருந்து தகவல் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது.

வேறு பல சமயங்களிலும் இதுபோன்ற தகவல்களை அந்தப் பெண் இந்த சமூக ஊடகக் குழுவில் பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொவிட்-19 நோயாளி ஒருவரின் தகவலை, அமைச்சின் பாதுகாக்கப்பட்ட தரவுகளிலிருந்து அனுமதியின்றி எடுத்து, தனது நண்பர் ஒருவருக்கு அவர் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான தகவல் தொடர்புக்கு OSA சட்டத்தின்கீழ் $2,000 வரை அபராதம், ஈராண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அத்தகைய பாதுகாக்கப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பெறுவோர் அவற்றை மேற்கொண்டு பகிரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த போலிசார், அவ்வாறு பகிர்வோருக்கும் மேற்கண்ட தண்டனைகள் பொருந்தும் என்றனர்.

கணினியிலிருந்து அனுமதியின்றி தகவல்களை எடுத்தது நிரூபிக்கப்பட்டால் கணினியைத் தவறாகப் பயன்படுத்திய சட்டப்பிரிவின் கீழ் அந்தப் பெண்ணுக்கு $5,000 வரை அபராதம், ஈராண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon