சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகள் அனைத்தையும் அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது குறித்து பேஸ்புக் பதிவு வெளியிட்ட மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, அந்தப் பதிவில் "நாம் வேகமாக செயல்பட்டால் அதற்குத் தகுந்தபடியான மாற்றங்களை செய்வதற்கான நேரம் முதலாளிகளுக்குக் குறையும் என்பதை அறிகிறோம். ஆனால் நாம் தாமதமாக செயல்பட்டால் நோய்ப்பரவல் அதிகமாகும் அபாயம் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
சில முதலாளிகளின் விரக்தியைக் காண்பிக்கும் சமூக ஊடகப் பதிவுகளும் குறுஞ்செய்திகளும் சமூக ஊடகங்களில் வலம் வருவதை அடுத்து அமைச்சர் டியோவின் விளக்கம் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதியன்று நடப்புக்கு வந்த கெடுபிடியான விதிமுறைகளின்படி வெளிநாட்டு ஊழியர்கள் நிமித்தமாகவோ வேறு எந்த காரணங்களுக்காகவோ தங்களது தங்கும் விடுதிகளைவிட்டு வெளியேற முடியாது. வேலை அனுமதி அட்டை மற்றும் எஸ் பாஸ் அட்டைதாரர்கள் 180,000 பேருக்கும் அவர்களைச் சார்ந்திருந்தோருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
"இந்த உத்தரவின்றி அவர்கள் வெளியில் தொடர்ந்து நடமாடும் அபாயம் உள்ளது. நாங்கள் இந்த நடவடிக்கையை தவிர்த்திருக்கலாமா? கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கலாமா? எங்களுக்குத் தெரியாது. ஆயினும் காலம் நம் பக்கம் இல்லை.
"இக்கிருமி விரைவாகவே விரிந்து பரவும் இந்நேரத்தில் எங்களால் காத்திருக்க முடியுமா? தள்ளிப்போடாமல் முன்னரே நடவடிக்கை எடுப்பது நல்லது என்பதே இந்த கிருமி விவகாரத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒன்று எனலாம்," என்றார் திருமதி டியோ.
பல்வேறு தங்கும் விடுதிகளிலிருந்து வந்து குறிப்பிட்ட கட்டுமானத் தளங்களில் இணைந்து பணியாற்றும் ஊழியர்கள் இடையே நோய்ப்பரவல் நிகழ்வதை சில ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் காட்டுகின்றன.
"சில ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகளில் வசிக்காதபோதும், கட்டுமானத் தளங்களில் வெவ்வேறு இடங்களில் தங்குவோருக்கு இடையிலான நோய்ப்பரவல் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது," என்று திருமதி டியோ கூறினார்.

