கேஎஃப்சி உணவக பணியாளர் மீது காறி உமிழ்ந்த 42 வயது பெண், பொது இடத்தில் தொல்லை கொடுத்ததன்பேரில் கைது செய்யப்பட்டதாக போலிசார் இன்று தெரிவித்தனர்.
நெக்ச் கடைத்தொகுதியில் இந்தச் சம்பவம் இவ்வாரம் புதன்கிழமை நடந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணை தனது உணவுக்காகக் காத்திருக்க கடை ஊழியர் சொன்னதற்கு ஆத்திரமடைந்த பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குரலை உயர்த்திப் பேசியதுடன் அவர் கடை ஊழியரை நோக்கி உமிழ்ந்தார்.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்குள் அங்கிருந்து அந்தப் பெண் சென்றுவிட்டார். ஆயினும் போலிசார் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு கைது செய்தனர்.
விசாரணை தொடர்கிறது. இந்தப் பெண், கிருமிப்பரவலை முறியடிக்கும் அரசாங்கத்தின் அதிரடித் திட்டத்தின் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

