முதலாளிகளில் 24 விழுக்காட்டினர் ஊழியர்களுக்கு இன்னும் ரொக்கமாகவே சம்பளம் வழங்குகின்றனர். உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதற்கும் சம்பள தொடர்பான தகராறுகளைத் தடுப்பதற்கும் மின்னிலக்க முறையில் சம்பளம் வழங்கும் முறைக்கு மாற இந்த முதலாளிகளை மனிதவள அமைச்சு கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.
"முக்கியமாக, ஊழியர்கள் சம்பளம் குறித்து பதற்றமும் அதிருப்தியும் அடையாத வண்ணம் அவர்களுக்கு நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்," என்று பேஸ்புக்கில் இது குறித்து எழுதிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்த ஊழியர்களின் குடும்பத்தினர் இவர்களைச் சார்ந்திருப்பதைச் சுட்டினார்.
"அண்மையில் 2,700க்கும் அதிகமான முதலாளிகள் கிட்டத்தட்ட 35,000 ஊழியர்களுக்காக வங்கிக் கணக்குகளைத் தொடங்க விண்ணப்பித்ததாக என் குழுவினர் என்னிடம் தெரிவித்தனர். இவர்களது முயற்சிகளை நான் வெகுவாக பாராட்டுகிறேன்," என்றார் திருமதி டியோ.
இதற்கிடையே, வெளிநாட்டு ஊழியர்களை அதிகாரிகள் இதற்குமுன்பே கிருமித்தொற்று சோதனை செய்திருக்கலாம் என்பது குறித்த விவாதம் நிலவுகிறது. உடல் நலமாக உள்ள ஊழியர்களை முதலாளிகள் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்கி பிப்ரவரியில் மனிதவள அமைச்சு ஆலோசனைக் கடிதம் அனுப்பியதை திருமதி டியோ நினைவுகூர்ந்தார்.
"ஏன்? அப்போது உடல் நலமாக இருந்த ஊழியர்கள் கூட்டங்கூட்டமாக மருத்துவமனைகளுக்குச் சென்று தங்களைப் பரிசோதிக்குமாறு கேட்டிருந்தனர். இவ்வாறு ஒரே நேரத்தில் அதிகமானோர் வந்தால், சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களால் சமாளிக்க இயலாது என்ற கவலை அப்போது இருந்தது," என்று அவர் விளக்கம் அளித்தார்.

