கொவிட்-19 கிருமிப்பரவல் நேரத்தில் அனைவரையும் உற்சாகப்படுத்தவும் முதல்நிலை ஊழியர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவும் ஹோம் என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடும் நிகழ்வு இன்று இரவு 7.55 மணிக்கு தொடங்கியது.
வானொலி நிலையங்கள், மீடியாகார்ப் தொலைகாட்சி ஒளிவழிகள் மற்றும் சமூகத் தளங்களுடன் இணைந்து பாடிக்கொண்டே தங்கள் வீட்டுச் சன்னலில் மின் பந்தங்கள் ஆட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மக்கள் செய்வதைக் காட்டும் காணொளிகள் சமுக ஊடகங்களில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஹோம் பாடலின் சிறப்பு மறுவடிவில் அந்தப் பாட்டுக்கு இசையமைத்த உள்ளூர் கலைஞர் டிக் லீயுடன் பாடகர்கள் ஷபீர், ரஹிமா ரஹிம், தௌஃபிக் உள்ளிட்ட பட்டிஸா மற்றும் 900க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 'வாய்சஸ் அப் சிங்கப்பூர்' பாடல் குழுவினர் இதற்காக ஒன்றிணைந்தனர்.
இதில் பங்குபெறும் பொதுமக்களும் தாங்கள் பாடுவதைக் காணொளி எடுத்து #singtogetherSG, #SingaporeTogether #stayhomeforSG ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பதிவேற்றலாம்.

