வலுக்கட்டாயமாக ஊழியர்களை அடைத்து வைத்த விடுதி நடத்துநருக்கு எச்சரிக்கை

1 mins read
b803df1f-d7bf-4376-a786-eacbbd2804a9
(படம்: டிடெபிள்யூசி2) -

வெளிநாட்டு ஊழியர்கள் 20 பேரை வலுக்கட்டயமாக துவாசில் உள்ள தங்கும் விடுதி அறை ஒன்றில் அடைத்து வைத்த விடுதி நடத்துநருக்கு மனிதவள அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலிஸ் விசாரணை முடியும் வரை அந்த விடுதி நடத்துநர் எந்த வெளிநாட்டு ஊழியரையும் வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடமிருந்து 'TWC2' எனும் ஊழியர் நல அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இது பற்றி குறிப்பிட்டிருந்தது. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையைத் திறந்து விடும்படி ஊழியர்கள் பாதுகாவலரைக் கேட்க, அவ்வாறு செய்ய 30 நிமிடங்கள் ஆகும் என்று பதில் வந்துள்ளது.

"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவேளை அந்த அறையில் தீ மூண்டால் நிலைமை ஆபத்தாக அமைந்திருக்கும்," என்று அந்த அமைப்பு சொன்னது. அதே நாளில் பிறகு அந்த ஊழியர்கள் அந்த அறையை விட, கழிவறை வசதி கொண்ட மற்றொரு பெரிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிட்ட அந்த அமைப்பு இது பற்றி மனிதவள அமைச்சிடம் தெரிவித்தது. உடனே அமைச்சு நடவடிக்கையில் இறங்கியது.

அன்றிரவு 8 மணிக்கு போலிசார் அந்த இடத்துக்கு வந்தவுடன் அறையில் கதவு திறக்கப்பட்டு. 20 ஊழியர்களும் விடுவிக்கப்பட்டனர். அந்த ஊழியர்களின் முதலாளியின் சம்மதத்துடன் தங்கும் விடுதி நடத்துநர் ஊழியர்களை அடைத்து வைத்தார் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.