கொரோனா கிருமி மனிதர்களை வீட்டிலேயே முடக்கிவிட்டது. நகர்புற இடங்களில் அவர்களின் ஆதிக்கம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட விலங்குகள் அத்தகைய இடங்களில் திரியத்தொடங்கி இருக்கின்றன.
லிட்டில் இந்தியா பகுதியில் முஸ்தஃபா சென்டர் அமைந்துள்ள தெருவில் நீர்நாய் குடும்பம் ஒன்று காணப்பட்டது. அதைக் காட்டும் காணொளி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. அந்தக் குடும்பத்தில் பெற்றோர் இரண்டு பேரும் வயது வந்த குட்டிகள் மூன்றும் சிறு குட்டிகள் இரண்டும் அடங்கும்.
டான் டோக் செங் மருத்துவமனைப் பகுதியிலும் நியூட்டன் கூட்டுரிமை புளோக் ஒன்றின் நீச்சல் குளத்திலும் சென்ற மாதம் இதே நீர்நாய் குடும்பம்தான் காணப்பட்டது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை விரிவுரையாளர் என் சிவசோதி கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இப்படி இவை பரந்த இடத்தில் இரை தேடி வருவதற்கு கொரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று தான் கருதுவதாக அவர் தெரவித்தார். கடந்த அக்டோபர் மாதம் பிறந்த இந்தக் குட்டிகள் பூமலையில் வளர்ந்துவந்தன.
ஆனால் எல்லாம் வளர்ந்து விட்டதால் வேறு பெரிய இடத்தைத் தேட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. குட்டிகளை வளர்க்க பூமலை நல்ல இடம்தான். இருந்தாலும் நீண்டகால போக்கில் உணவுக்கு அந்தப் பகுதியைச் சார்ந்து இருக்க முடியாது என்று திரு சிவசோதி விளக்கினார்.
பெரும்பாலான இடங்களை இதர நீர்நாய் குடும்பங்கள் உணவுக்காக ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பதால் இந்தக் குடும்பத்துக்கு இடம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நீர்நாய்களைப் பார்க்கும்போது அவற்றுக்கும் இடம் கொடுத்து தொலைவில் இருந்து அவற்றை ரசித்து வாழவிட்டு வாழும்படி பொதுமக்களை அந்த விரிவுரையாளர் கேட்டுக்கொண்டார்.

