மானபங்க வழக்கு ஒன்றில் மாவட்ட நீதிமன்றம் விதித்த கண்காணிப்பு உத்தரவை மாற்றி மானபங்கச் செயலில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டெரன்ஸ் சியாவ் என்ற 24 வயது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவரின் தண்டனையைச் சிறைத்தண்டனையாக மாற்றி உத்தரவிட்ட தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், குற்றவாளி திருந்துவதற்கான வலுவான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை என்று தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கணிதப் பாடத் துறையைச் (applied mathematics) சேர்ந்த டெரன்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 வயது மாது ஒருவரை பெருவிரைவு ரயில் பயணத்தின்போது மானபங்கப்படுத்தினார்.
தமது அருகில் உட்கார்ந்த அந்த மாதுவின் தொடைப் பகுதியை டெரன்ஸ் தொட்டார். அந்தப் பெண் அங்கிருந்து எழுந்தபோது மீண்டும் அவரைத் தொட்டார்.
பிறகு, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்ற டெரன்ஸ், அந்தப் பெண் இறங்கிய ரயில் நிலையத்தில் தாமும் இறங்கி மின்படிகளில் சென்றபோது அந்த மாதின் பின்புறத்தை மீண்டும் தொட்டார். அந்த மாது கூச்சலிட்டபின் அங்கிருந்து டெரன்ஸ் ஓட்டம் பிடித்தார்.
அந்த மாது ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் கூற, நிலைய அதிகாரி ஒருவர் டெரன்ஸை பிடித்தார். இதன் தொடர்பில் மாது காவல் துறையினரிடமும் புகார் அளித்திருந்தார்.

