சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு கடைத்தொகுதி உரிமையாளர்கள் வாடகைக் கட்டணத்தில் வழங்கப்படும் கழிவுகளை நீட்டித்துள்ளனர்.
ஃபேரர் பார்க்கில் உள்ள சிட்டி ஸ்குவேர் மால், கிளார்க் கீயில் உள்ள சென்ட்ரல் மால் உள்ளிட்ட கடைத்தொகுதிகளை நிர்வகிக்கும் 'சிட்டி டிவெலப்மண்ட்ஸ் லிமிடெட்' (சிடிஎல்) நிறுவனம், சில்லறை விற்பனைக் கடைகளுக்கான வாடகைக் கழிவை தற்போதுள்ள $17 மில்லியனிலிருந்து $23 மில்லியனாக உயர்த்தவுள்ளதாக நேற்று அறிவித்தது.
அதன்படி, இம்மாதமும் அடுத்த மாதமும் வாடகைக் கட்டணத்தில் 100 விழுக்காடு கழிவும் ஜூன் மாதம் 50 விழுக்காடு கழிவும் ஜூலையில் 30 விழுக்காடு கழிவும் வாடகைதாரர்கள் பெறுவர்.
அப்படியென்றால், மொத்தம் 2.8 மாத வாடகைக் கட்டணக் கழிவுகளை வாடகைதாரர்கள் பெறுவர்.
தற்போது நடப்பில் உள்ள கடுமையான விதிமுறைகளின்படி, தனது வாடகைதாரர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் செயல்படவில்லை என்று சிடிஎல் கூறியது.
மேலும், தொழிலைத் தொடங்கியபோது வாடகைதாரர்கள் செலுத்திய வைப்புத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு வாடகை செலுத்தவும் சிடிஎல் அனுமதிக்கிறது.
இந்நிலையில், 'கேப்பிட்டலேண்ட்' உள்ளிட்ட இதர கடைத்தொகுதி உரிமையாளர்களும் முன்னதாக வாடகைதாரர்களுக்கு வாடகைக் கட்டணத்தில் கழிவுகள் வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

