கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதால் தீவு முழுவதும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் அடுக்குமாடி குடியிருப்புப் பேட்டைகளிலும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீச்சல் குளத்தை மட்டும் மாதம் 10,000 வெள்ளிக்கு வாடகைக்கு எடுத்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த குடியேறி ஒருவர். தற்போது அவர் வசிக்கும் தனியார் அடுக்குமாடி வீடுகளில் நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. இதனால் தனியாக ஒரு நீச்சல் குளத்தை அவர் வாடகைக்கு எடுத்துள்ளதாக அவரது சொத்து முகவரான சிங்கப்பூர் ரியால்டர்சின் லெஸ்டர் சென் கூறினார்.
ஆரம்பத்தில் செந்தோசா கோவ்வில் உள்ள 30 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பங்களா முழுவதையும் அவர் வாடகைக்கு எடுக்க விரும்பினார். ஆனால் மாத வாடகை 30,000 வெள்ளியாக இருந்ததால் அவர் அந்த எண்ணத்தை கைவிட்டதாக முகவர் சொன்னார். பிரிட்டிஷ் குடியேறியின் பெயரை முகவர் வெளியிடவில்லை.

