சிங்கப்பூரில் இம்மாதம் 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு எண்ணுக்கு இரண்டு வார காலத்தில் 6,600க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 380 அழைப்புகள் வந்ததாக இது கருதப்படும். தினந்தோறும் வரும் மொத்த அழைப்புகளில் 40 விழுக்காடு அல்லது 170 அழைப்புகள் பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும். எஞ்சிய அழைப்புகள் சிறப்புத் தேவை உள்ளோருக்கான உதவி அமைப்புகளுக்கு மாற்றிவிடப்பட்டன. கொவிட்-19 நெருக்கடி காலத்தில் உளவியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த 24 மணி நேர சேவையில் கிட்டத்தட்ட 500 தொண்டூழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள், சமூக ஊழியர்கள், மனநல மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட 22 முதல் 25 பேர் வரையிலான குழு எட்டு மணி நேர கணக்கில் நாளுக்கு மூன்று முறைமாற்று (ஷிஃப்ட்) அடிப்படையில் சேவையாற்றுகிறது. இந்த நெருக்கடி காலத்தில் வெவ்வேறு சவால்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் அழைப்புகள் தனித்துவமிக்கது என்றும் அவர் கூறினார்.

