சிங்கப்பூர் ஆயுதப் படை நான்கு மாதங்களுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளுடன் வான்குடைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் முழுநேர தேசிய சேவையாளரான 21 வயது பிரைவேட் ஜோஷுவா குவெக் ஷு ஜி, 2019 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தைவானில் நடந்த சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தனிப்பட்ட முறையில் நடத்திய வான்குடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முதுகுத் தண்டில் காயம் அடைந்தார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
இங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோஷுவா குணமடைந்து சென்ற மாதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது வீட்டில் உடல் நலம் தேறி வருகிறார்.
இந்தச் சம்பவத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வான்குடைப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்போது புதிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் வான்குடைப் பயிற்சியை சிங்கப்பூர் ஆயுதப் படை மீண்டும் நேற்று முன்தினம் தொடங்கியது.
பிரைவேட் ஜோஷுவா குவேக் தனது அடிப்படை வான்குடை பயிற்சியின்போது ஐந்தாவது, இறுதி முறையாகக் குதித்தபோது, வான்குடையிலிருந்து விமானத்துடன் இணைக்கப்பட்ட கயிறு இடையூறு ஏற்படுத்தியது.
விமானத்திலிருந்து குதித்தபோது அந்தக் கயிறு அவரது கழுத்தைச் சுற்றி நெரித்தது.
அதனால், 21 வயது குவேக் தரையில் பாதுகாப்பாக இறங்கினாலும் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிங்கப்பூர் ராணுவப்படை இச்சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த, சிங்கப்பூர் ஆயுதப்படையின் தலைமைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் ஆதரவுடன் குழு ஒன்றை அமைத்து விசாரித்தது. அதேவேளையில் கயிற்றுடன் கூடிய வான்குடைப் பயிற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அப்போது, "நடப்பில் உள்ள அனைத்து பாதுகாப்புக் கோட்பாடுகளும் பாதுகாப்பு விதிமுறைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்," என்றும் தற்காப்பு அமைச்சர் இங் கூறியிருந்தார்.
இந்நிலையில், சிங்கப்பூர் ஆயுதப்படையின் 240வது வான்குடைப் பயிற்சியின் ஒரு பகுதியாக மின்னல்படை பயிற்சிப் பாணியிலான பயிற்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது எனவும் அந்தப் பயிற்சி புதிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்தப்பட்டதாக சிங்கப்பூர் ஆயுதப்படை தனது ஃபேஸ்புக் தளத்தில் கூறியுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைப்படி, வான்குடை வீரர் மற்றும் பயிற்சியாளர் அணிந்திருக்கும் தலைக்கவசத்தில் புகைப்படக்கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
இதன்மூலம் வான்குடைப்பயிற்சியின் நடவடிக்கைகள் பதிவுசெய்யப்படும். பயிற்சிக்குப் பின்னர், அந்தப் பதிவுகள் சீராய்வு செய்யப் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு பாதுகாப்பு அம்சமாக எளிதில் பார்க்கக்கூடிய வகையில் எல்லைக்கோட்டில் அடையாளக் குறியீடு வரைதல். மேலும் குறைந்த அனுபவம் உள்ள வான்குடை வீரர்களுக்கு அதிகளவிலான கண்காணிப்பு இருக்கும்.
வான்குடைப் பயிற்சியின்போது தகுதிபெற்ற வான்குடைப் பயிற்சியாளர் ஒருவர் விமானத்தில் இருக்க வேண்டியது அவசியமாக்கப்படுகிறது.
அத்துடன் சரியான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க இரண்டு தகுதிபெற்ற வான்குடை வீரர்கள், வெளியேறும் பகுதியில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வான்குடை வீரருக்கும் இப்போது 'வாக்கி-டாக்கி' கருவி வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்கியது பற்றி அவர்களின் பொறுப்பாளருக்குத் தெரிவிக்கலாம்.
இரவில் பயிற்சி மேற்கொள்பவர்கள், பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் அவர்களிடம் இருந்து ஒளிரும் பச்சை விளக்கையும் அகச்சிவப்பு விளக்கையும் அணைத்துவிடவேண்டும்.
ஆயுதப்படையின் பாதுகாப்புக் குழுவினர் பரிந்துரைத்த புதிய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் மின்னல் படைப் பிரிவைச் சேர்ந்த வான்குடை வீரர்களால் சோதித்துப்பார்க்கப்பட்டதாக மின்னல் படைத் தலைவர் கர்னல் கென்னி டே தெரிவித்தார்.
புதிய மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் வான்குடைப் பயிற்சியின்போது ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கவும் பாதுகாப்பாக பயிற்சி செய்யவும் வழிவகுக் என்று கர்னல் டே கூறினார்.

