அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியவர் மன்னிப்புக் கோரினார்

அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியவர் மன்னிப்புக் கோரினார்

2 mins read
20d99b83-1030-48c2-a29e-a321788c5365
சிங்கப்பூர் எக்ஸ்போவில் உள்ள சமூகப் பரமாரிப்பு வசிப்பிடம். கோப்புப்படம்: எஸ்டி -

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய இருவரில் ஒருவர் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

திருமதி டியோ மீதும் அவரது கணவர் மீதும் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் கூறிய ஃபேஸ்புக் பயனீட்டாளரான டோனல்ட் லியூ, அதற்காக மன்னிப்பு கோரினார்.

"இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக திருமதி ஜோசஃபின் டியோவிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் வெளியிட்ட அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்.

"இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் அறிக்கைகளையோ இதுபோன்ற குற்றச்சாட்டுகளையோ இனி நான் வெளியிட மாட்டேன் என உறுதி கூறுகிறேன்," என்று நேற்று முன்தினம் இரவு திரு லியூ பதிவிட்டார்.

கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்க வைப்பதற்காக சமூகப் பரமாரிப்பு வசிப்பிடங்களை அமைத்ததன் தொடர்பில் திருமதி டியோவும் அவரது கணவர் டியோ எங் சியோங்கும் நியாயமற்ற முறையில் பலன்களைப் பெற்றதாக இம்மாதம் 14ஆம் தேதி திரு லியூ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் சமூகப் பரமாரிப்பு வசிப்பிடத்தை அமைத்துத் தந்தது சர்பானா ஜூரோங் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிங்கப்பூர், தென்கிழக்காசியா, வட ஆசியா ஆகிய பகுதிகளுக்கு அனைத்துலக தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிப்பவராக அமைச்சர் டியோவின் கணவர் உள்ளார்.

இந்நிலையில், பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் பொய்யான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளும்படி அமைச்சர் டியோவின் வழக்கறிஞர்கள் திரு லியூவுக்கும் ஆர்வலரான ஜோலோவன் வாமுக்கும் நேற்று முன்தினம் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திரு லியூ மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

திரு லியூவும் திரு வாமும் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதிக்கு தலா $1,000 நன்கொடை வழங்கவேண்டும் என்றும் திருமதி டியோவின் வழக்கறிஞர்கள் கடிதத்தில் கூறியிருந்தனர்.

அந்த நன்கொடையை திரு லியூ வழங்கியுள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து கருத்து பெறுவதற்காக திரு ஜோலோவன் வாமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு தொடர்புகொண்டுள்ளது.