அடுத்த வாரம் கோழி விலை உயரக்கூடும்

அடுத்த வாரம் கோழி விலை உயரக்கூடும்

1 mins read
90468b87-801a-4e47-ab2d-73a7b7001718
கோப்புப்படம்: எஸ்டி, சோங் ஜுன் லியாங் -

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கோழியைக் கொள்முதல் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளதால் இங்கு கோழி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களில் மலேசியாவில் கோழியின் விலை சுமார் 45 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கோழி வணிகர் சங்கத்தின் தலைவர் ஓங் கியன் சான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று கூறினார்.

"பெரும்பாலான கோழி விநியோகிப்பாளர்கள் இப்போதைக்கு விலை உயர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், அவர்களால் இந்த நிலையைத் தொடர இயலாது. எனவே அடுத்த வாரம் கோழியின் விலை உயரக்கூடும்," என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள பேரங்காடிகளிலும் ஈரச் சந்தைகளிலும் விற்கப்படும் கோழியின் விலை அடுத்த வாரம் 10 முதல் 15 விழுக்காடு வரை உயரக்கூடும் என அவர் சொன்னார்.

"விலை உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கொவிட்-19 நிலவரத்தால் ஒட்டுமொத்த விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வைத் தவிர்க்க முடியாது," என்று திரு ஓங் விவரித்தார்.

கோழி விலை உயரக்கூடும் என்றாலும் கோழியின் வரத்து குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இங்கு உணவு விநியோகம் இதுவரை நிலையாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

"முட்டைகள், மீன், கோழி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் வரத்து தொடர்ந்து நிலையாக உள்ளது. சிங்கப்பூரின் உணவு வரத்தைப் பாதுகாக்க நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறோம்," என்று அது விவரித்தது.