சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் தன்னிச்சையாக செயல்படும் போலிஸ் இயந்திர மனிதர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றன.
தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க இந்த இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இம்மாதம் தொடங்கியதிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்பட்ட அந்த தங்கும் விடுதியில் இரண்டு பல்நோக்கு இயந்திர மனிதர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த மாதம் நடுப்பகுதியிலிருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான தனிமைப்படுத்தும் இடத்தில் இவ்விரு இயந்திர மனிதர்களும் சுற்றுக்காவலில் ஈடுபட்டன.
இந்த இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துவதால் கூடுதல் இடங்களில் சுற்றுக்காவலில் ஈடுபடலாம் என்று தங்கும் விடுதியில் சுற்றுக்காவலில் ஈடுபடும் 15க்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகளுக்குத் தலைமை தாங்கும் போலிஸ் ஆய்வாளர் டியோ வான் லிங் தெரிவித்தார். தங்கும் விடுதிகளில் உள்ள மற்ற இடங்களில் போலிஸ் அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபடும் அதே சமயத்தில் இந்த இரண்டு இயந்திர மனிதர்களும் தங்கும் விடுதியின் வேறு பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்தார்.
இயந்திர மனிதர்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் ஒலிபெருக்கிகளையும் தளபத்திய மையத்திலிருந்து அதிகாரி ஒருவர் இயக்கலாம். தங்கும் விடுதிகளில் ஏதேனும் சிறு விபத்துகள் நிகழ்ந்தால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதன் மூலம் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் அருகில் அதிகாரிகள் செல்வதைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டு ஊழியர்களுக்கு இயந்திர மனிதர்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் நினைவூட்டலாம் என்று ஆய்வாளர் டியோ கூறினார்.

