கடந்தகால கையிருப்பு நிதியைப் பயன்படுத்திக்கொள்வதை கொவிட்-19 அவசியமாக்கிவிட்டது

மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் கவனித்துக்கொள்ளவும் அவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டுவதை உறுதிசெய்யவும் சிங்கப்பூர் தன் கடந்தகால கையிருப்பு நிதியைப் பயன்படுத்திக்கொள்வதை கொவிட்-19 கிருமிப் பரவல் அவசியமாக்கிவிட்டது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே கையிருப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கொவிட்-19 அந்த வரையறைக்குச் சரியாக பொருந்துகிறது என்றும் அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.

“மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நமது பிழைப்பும் இருப்புமே ஆபத்தில் உள்ளது போன்ற ஒரு சூழலில் இருக்கிறோம்,” என்று அதிபர் கூறியுள்ளார்.

கொரோனா கிருமிப் பரவல் நாட்டின் பொருளியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, தொழில் செய்வோருக்கும் ஊழியர்களுக்கும் உதவும் வகையில் அரசாங்கம் ஆதரவுத் தொகுப்புகளை அறிவித்தது. அந்தத் திட்டங்களுக்கான நிதிக்காக தேசிய கையிருப்பிலிருந்து கிட்டத்தட்ட $21 பில்லியனை எடுத்துக்கொள்ள கடந்த மார்ச்சிலும் ஏப்ரலிலும் அதிபர் ஒப்புதல் அளித்து இருந்தார்.

கடந்த பிப்ரவரியில் இருந்து அரசாங்கம் $63.7 மதிப்பிலான மூன்று ஆதரவுத் திட்டங்களை அறிவித்தது.

இந்த நிலையில், தொழில்புரிவோருக்கும் தனிநபர்களுக்கும் மேலும் கைகொடுக்கும் வகையில் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நான்காவது ஆதரவுத் தொகுப்பை அறிவிக்கவுள்ளார்.

ஜூன் 1ஆம் தேதியுடன் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்தாலும் அதிலிருந்து பாதுகாப்பாக வெளிவரும் நோக்கில் அதன்பின் கிட்டத்தட்ட மேலும் ஒரு மாத காலத்திற்கு இன்னும் பல நிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் நான்காவது ஆதரவுத் தொகுப்பு கைகொடுக்கும். அதற்காகவும் அரசாங்கம் தேசிய கையிருப்பில் இருந்து மேலும் நிதி கோரக்கூடும்.

“அந்த நான்காவது வரவுசெலவுத் திட்டத்தின் அம்சங்கள் என்ன, அது எந்தெந்த வழிகளில் சிங்கப்பூரர்கள், ஊழியர்கள், நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் என்பதை அறிய செவ்வாய்க்கிழமை வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அதிபர் ஹலிமா சொன்னார்.

தேசிய கையிருப்பு நிதியைப் பயன்படுத்த அனுமதித்து தாம் ஒப்புதல் அளித்தது அவ்வளவு எளிதான முடிவாக இருக்கவில்லை என்றார் அதிபர்.

பிரச்சினைகள் குறித்து அதிக நேரம் ஆழ்ந்து சிந்தித்ததாகவும் அவற்றைப் பற்றி நிதியமைச்சர் ஹெங், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அதிபர் ஆலோசனை மன்றத்தினருடன் விரிவாக விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்தகாலக் கையிருப்புகள் நமக்கு மிக முக்கியம். அதே நேரத்தில், இந்தத் தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் அக்கறையோடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம்,” என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.

“இப்போதைய சூழலை நம்மால் கையாள முடியாவிட்டால் எதிர்காலத் தலைமுறையைப் பற்றி, ஏன் எதிர்காலத்தைப் பற்றியும் நாம் பேச முடியாது. கொரோனா பிரச்சினையில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவதும் அதன்பின் வளர்ச்சியை உறுதிசெய்வதும் மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்றுக் காலை காணொளி வழியாகக் கலந்துரையாடிய அதிபர், அதன்பின் அதே முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு பேசினார்.

அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்களுக்காக தொழிற்சங்கவாதிகள் நன்றியுரைத்ததாகவும் பல்வேறு பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளின் அவசியத்தை அவர்கள் அறிந்துள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!