பள்ளி மாணவர்களுக்கு முகக்கேடயங்கள், கை சுத்திகரிப்பான் வழங்கப்படும்

பாலர் பள்ளிப் பிள்ளைகள், மாணவர்கள் ஜூன் 2ஆம் தேதியன்று தங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களுக்கு முகக்கவசங்களுக்குப் பதிலாக ஆளுக்குக்கொரு முகக்கேடயம் கொடுக்கப்படும்.

ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம், கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் சேர்ந்து இதை வழங்குவதாக தெமாசெக் அறநிறு வனம் நேற்று தெரிவித்தது.

அத்துடன் பாலர் பள்ளி, தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தலா இரண்டு கை சுத்திகரிப்பான்களும் கொடுக்கப்படும். அவற்றில் ஒன்று பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய 50 மில்லி லிட்டர் அளவிலானது. மற்றொன்று, பெரிய அளவிலான 500 மில்லி லிட்டர் போத்தல்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் ஜூன் மாதம் 8ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய தெமாசெக் அறநிறுவனம் அதன் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறியது.

இது ஒரு பெரிய நடவடிக்கை என்பதால், தாமதத்தின் காரணமாக முகக்கேடயங்கள் கிடைக்காத மாணவர்கள் அது கிடைக்கும் வரை முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.