நாடாளுமன்றக் கூட்டங்கள் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்க ஒப்புதல்

நாடாளுமன்றக் கூட்டங்கள் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்க ஒப்புதல்

1 mins read
5b29fae5-7057-40fd-9acc-cdd9ea43be17
படம்: gov.sg -

நாடாளுமன்றக் கூட்டங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாடாளுமன்றக் கட்டடம் தவிர மேலும் நான்கு வெவ்வேறு இடங்களில் நடப்பதற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து அந்த இடங்களைப் பட்டியலிட்டார்.

ஓல்டு பார்லிமண்ட் லேனில் உள்ள ஆர்ட்ஸ் ஹவுஸ், ஹை ஸ்திரீட்டில் உள்ள 'த டிரெஷரி' எனும் கருவூலக் கட்டடம், நார்த் போன விஸ்தா ரோட்டில் உள்ள அரசாங்க சேவை கல்லூரி, மரினா பொலிவார்ட்டில் உள்ள என்டியுசி சென்டர் ஆகியவையே அந்த நான்கு இடங்கள். இம்மாதம் 22ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை நாடாளு மன்றக் கூட்டங்களை இந்த நான்கு இடங்களில் நடத்தலாம் என்று அதிபர் ஹலிமா கையெழுத்திட்ட பிரகடனம் நேற்று முன்தினம் அரசிதழில் பதிவிடப்பட்டது.

கொவிட்-19 காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தவிர மற்ற இடங்களிலும் நடத்தப்படலாம் என்று கொண்டு வரப்பட்ட அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா, இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், வரும் செவ்வாய்க்கிழமை கூடும் நாடாளு மன்றக் கூட்டம் ஒரே இடத்தில் அதாவது நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.