நீண்ட வரிசை, தாமதம், பரிசோதனை: விமானப் பயணங்கள் இப்படி இருக்கும் என கணிப்பு

2 mins read
43e1702d-da55-4bde-b6d0-5c56c02ac205
கூட்ட நெரிசலால் நிரம்பி வழிந்த விமான நிலையங்களில் இனி ஒவ்வொரு பயணிக்கும் இடையில் பாதுகாப்பான இடைவெளி விடவேண்டும் என்பதால் வரிசையின் நீளம் மிகவும் நீண்டதாக இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வர்த்தகக் கல்விப் பிரிவின் இணை பேராசிரியர் நிதின் பங்கர்கர் தெரிவித்துள்ளார். சாங்கி விமான நிலையம். கோப்புப்படம்: எஸ்டி -

பயணிகள் இனி மேற்கொள்ள இருக்கும் விமானப் பயணங்கள் சொகுசாக இருக்காது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தாமதம், வசதிக் குறைவு ஆகியவற்றோடு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்பது அவர்களின் கருத்து.

கொவிட்-19 சிரமம் ஓரளவு குறைந்த பின்னர் விமானங்களை இயக்க உலகின் பல்வேறு விமான நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

சேவை மீண்டும் தொடங்கும்போது பயணத் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் விமானச் சீட்டு பதிவிற்காக விமான நிலையங்களில் வரிசையில் நிற்கும்போது பாதுகாப்பு இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் குழப்பம் ஏற்படலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

குறிப்பாக, ஏற்கெனவே கூட்ட நெரிசலால் நிரம்பி வழிந்த விமான நிலையங்களில் இனி ஒவ்வொரு பயணிக்கும் இடையில் பாதுகாப்பான இடைவெளி விடவேண்டும் என்பதால் வரிசையின் நீளம் மிகவும் நீண்டதாக இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வர்த்தகக் கல்விப் பிரிவின் இணை பேராசிரியர் நிதின் பங்கர்கர் தெரிவித்துள்ளார்.

புதிய பயணிகள் வருகைப் பதிவு முறையில் பாஸ்போர்ட் மற்றும் விசா சோதனை, பயணப் பெட்டிகளின் எடை சரிபார்ப்பு ஆகியவற்றோடு உடல்வெப்பப் பரிசோதனையும் இடம்பெறும் என்கிறார் அவர்.

சில நிபுணர்கள், பயணிகள் வருகைப் பதிவு முறையில் கடுமையான, அதிகமான நடைமுறைகள் இருக்கக்கூடும் என்று முன்னுரைக்கின்றனர்.

சிங்கப்பூரும் புதிய நடைமுறைகளுக்குத் தயாராகி வருவதாக இம்மாத இறுதியில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் குறிப்பிட்டு இருந்தார்.

விமானத்தில் ஏறுவதிலிருந்து செல்ல வேண்டிய இடத்தில் பயணத்தை முடிப்பது வரை செயல்

படுத்தப்பட வேண்டிய பல்வேறு உத்தேச நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அப்போது அவர் தெரிவித்து இருந்தார்.

வசதிக்குறைவு, தாமதம் ஆகியன ஒருபக்கம் இருப்பினும் பயணங் களின்போது பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் திரு கோ குறிப்பிட்டு இருந்தார்.