கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் அதிரடித் திட்டம் நிறைவுக்கு வரும் பட்சத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவுள்ளன. அவ்வேளையில், வழிபாட்டுத் தலங்களில் செயல்படுத்தவேண்டிய வழிகாட்டித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பும் பொருட்டு முதல் கட்டமாக வழிபாட்டுத் தலங்களில் தனிப்பட்ட வழிபாடுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. எந்த ஒரு நேரத்திலும் அதிகபட்சமாக ஐந்து குடும்பங்கள் மட்டுமே தலத்தில் இருக்கவேண்டும்.
வழிபாட்டாளர்கள் தனியாக தங்களின் பிரார்த்தனைகளை மேற்கொள்ளவேண்டும். குடும்பமாக வருவோர் சேர்ந்து பிரார்த்தனை செய்யலாம்.
பாதுகாப்பு இடைவெளிக்கான ஏற்பாடுகளும் வழிபாட்டுத் தலங்கள் செய்திருக்கவேண்டும்.
வழிபாட்டுத் தலங்களில் பாடுவதற்கு அனுமதி கிடையாது. பாடும்போது எச்சில் அதிகம் தெறிக்க வாய்ப்பிருப்பதால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

