$33 பில்லியன் வலிமைக்கான வரவு செலவுத் திட்டம்; கொவிட்-19க்கு எதிரான போருக்கு இதுவரை $100 பில்லியன் 

கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளியல் சரிவை எதிர்கொள்ள ஊழியர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் மேலும் அதிக உதவி தேவைப்படுகிறது. 

அவர்களை முக்கிய நோக்கமாகக் கொண்டு வலிமைக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

நான்கு மாதத்திற்குள் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ள நான்காவது வரவு செலவுத் திட்டம் இது. 

நம்மை ஒன்றிணைக்கும் வரவுசெலவுத் திட்டம், நமது மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம், நமது ஒற்றுமைக்கான வரவு செலவுத் திட்டம் ஆகிய முந்தைய திட்டங்களையும் தற்போதைய வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தையும் சேர்த்து இதுவரை கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு எதிரான போருக்காக கிட்டத்தட்ட $100 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20% தொகை இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு சிங்கப்பூரின் நிதி இருப்பிலிருந்து $31 பில்லியன் எடுக்கப்படும் என்றும் அதற்கான ஒப்புதலை அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கியுள்ளதாகவும் துணைப் பிரதமர் தெரிவித்தார். 

இதுவரை நான்கு வரவுசெலவுத் திட்டங்களுக்காக நிதி இருப்பிலிருந்து மொத்தம் $52 பில்லியன் எடுக்கப்படுகிறது.