அடிப்படை ராணுவப் பயிற்சி தொடங்கியது

கொவிட்-19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய சேவையாளர் களுக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி நேற்று மீண்டும் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அன்று 6,300 வீரர்களில் 1,500 ேபர் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குத் திரும்பியிருந்தனர்.

ஏப்ரல் 7ஆம் தேதி கொவிட்-19 பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன.

இதனால் அடிப்படை ராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து மே 26ஆம் தேதியிலிருந்து ஜூன் 7ஆம் தேதி வரையில் சேர்க்கப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடிப்படை ராணுவப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மொத்தம் இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் சேர்க்கப்பட்ட முதல் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நான்கு வாரம் தாமதமாக பயிற்சியை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் மாதத்தில் இவர்கள் பயிற்சியை முடிக்க வேண்டும். ஆனால் ஜூலையில் இவர்கள் பயிற்சியை முடிக்கவிருக்கின்றனர்.

ஏப்ரல், மே மாதத்தில் நிர்வாக ரீதியாக அடுத்த குழுவினர் சேர்க்கப்பட்டாலும் முகாமுக்கு நேரில் வர வேண்டியதில்லை.

இவர்களுக்கு அடிப்படை ராணுவப் பயிற்சியை முடிக்க இரண்டு வாரம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக ராணுவப் பயிற்சி நிறுத்தி வைக்கப் பட்டாலும் தேசிய சேவையாளர்கள் ஆயத்தநிலையில் இருப்பதை பாதிக்காது என்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு கூறியது.

செலராங், பாசிர் ரிஸ் பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும் நேற்று வீரர்கள் பயிற்சிக்குத் திரும்பியிருந்தனர்.

அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே பேருந்துகளில் ஏறி அவர்கள் முகாமுக்குச் சென்றனர்.