இரண்டாம் கட்டத் திறப்பு பற்றி ஜூன் மாத மத்தியில் முடிவு

கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவிற்கு வரும் நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் பெரும்பாலும் அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.

ஆயினும், சமூகத்தில் கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தைப் பொறுத்தே அது அமையும் என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து தொடங்கும் முதலாம் கட்டத் திறப்பின்போது கிட்டத்தட்ட 75% பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும் என்று திரு வோங் சொன்னார்.

கொரோனா தொற்று முறியடிப்பிற்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அதன்பின் ஜூன் மாதத்தின் முதல் இரு வாரங்களில் நிலைமையைப் பணிக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் சொன்னார்.

“சமூகத்தில் கிருமி பரவுவது குறைவாகவும் நிலையாகவும் இருந்தால், இரண்டாம் கட்டமாக மேலும் பல நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிப்பது குறித்து ஜூன் மாத மத்தியில் தீர்மானிப்போம். அதாவது, ஜூன் மாத இறுதிக்குள் இரண்டாம் கட்டத் திறப்பு நிகழலாம்,” என்றார் அமைச்சர்.

இரண்டாம் கட்டத்தின்போது பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் இரண்டாம் கட்டத்தின்போது கிட்டத்தட்ட அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்றும் அவர் விளக்கினார்.

சில்லறை விற்பனைக் கடைகள், பயனீட்டாளர் சேவைகள், உணவு, பானக் கடைகளில் உணவருந்த அனுமதிப்பது போன்றவை அதில் அடங்கும். ஆயினும், உணவு, பானக் கடைகளில் உணவருந்தச் செல்லும் ஒரு குழுவில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே இருக்கவேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மேற்பட்டோர் சாப்பிடச் சென்றாலும் ஒரு மேசையில் அதிகபட்சம் ஐவர் மட்டுமே அமர வேண்டும் என்ற விதி நடப்பில் இருக்கும்.

விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள் போன்றவையும் இரண்டாம் கட்டத்தின்போது திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அதிகபட்சம் ஐவர் என்ற விதியுடன் சமூகக் கலந்துறவாடல்களும் இல்லங்களுக்கு வருகைபுரிவதும் அனுமதிக்கப்படலாம் என்று அமைச்சர் வோங் சொன்னார்.

இருப்பினும், அதிகமானோர் ஒன்றுகூடுவது அல்லது நெருக்கமான தொடர்பு இருக்கும்படியான மூடிய இடங்களுக்குள் கூடுவது போன்ற அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிப்பதில் மிகக் கவனமான அணுகுமுறை கையாளப்படும் என அவர் தெரிவித்தார்.

“அத்தகைய இடங்களில் கிருமி பரவிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நமது அனுபவத்திலும் வெளிநாடுகளின் அனுபவங்களிலும் இதை நாம் அறிந்துள்ளோம். அதனால் அத்தகைய இடங்களில் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிப்பது குறித்து அதிக கவனத்துடன் அணுக விரும்புகிறோம்,” என்றார் திரு வோங்.

“அந்த வெவ்வேறு இடங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தகங்களுடனும் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.

“அவற்றின் அடிப்படையில், இரண்டாம் கட்டத் திறப்பின்போது அவர்கள் எப்போது மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஆகையால், இரண்டாம் கட்டத்தின்போது அவர்கள் அனைவரும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க முடியாமலும் போகலாம். ஆனாலும், தேவையான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இரண்டாம் கட்டத் திறப்பின்போது அவர்களும் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும்,” என அமைச்சர் விவரித்தார்.

முன்னதாக, நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்தபின் குறைந்தது நான்கு வாரங்களுக்குப் பிறகே இரண்டாம் கட்டத் திறப்பு இருக்கும் என்றும் அதே நேரத்தில் சூழ்நிலையைப் பொறுத்து அது முன்னதாகவே இடம்பெறலாம் என்றும் பணிக்குழு தெரிவித்து இருந்தது.

ஜூன் 2ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும்; சிலர் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர். இருந்தாலும், இப்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்வோர் அதைத் தொடர வேண்டும்.

முதற்கட்டத் திறப்பின்போது கடைகள் மூடப்பட்டிருக்கும். உணவகங்களிலும் மற்ற உணவுக் கடைகளிலும் உணவருந்த முடியாது.