அமைச்சு: பாலர் பள்ளி ஊழியர் 12 பேருக்கு தொற்று இருந்தது

சிங்கப்பூரில் இந்த மாதம் முதல் பாலர் பள்ளி ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அது முதல் பல பாலர் பள்ளி ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் நேற்று செய்தியாளர் மெய்நிகர் கூட்டத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

இருந்தாலும் அந்த ஊழியர்களில் 11 பேருக்கு முதலில் தொற்று இருந்தது என்றும் பிறகு அறவே தொற்று இல்லாதபடி அவர்கள் குணமடைந்துவிட்டதாக பிறகு நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் தெரியவந்தது என்றும் அவர் கூறினார். எஞ்சிய ஓர் ஊழியரைப் பொறுத்தவரையில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் வரவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் மே 26 நிலவரப்படி பாலர்பள்ளி ஊழியர்களிடம் 33,100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

அவற்றில் 12 சோதனைகள் அல்லது 0.036 விழுக்காட்டுச் சோதனைகள்தான் கொரோனா கிருமித்தொற்றைக் காட்டின.

சிங்கப்பூரில் பாலர் பள்ளி நிலையங்கள் அடுத்த மாதம் மீண்டும் திறக்க இருக்கின்றன.

அதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலர்பள்ளி ஊழியர்கள் அனைவரும் ஒரு நேர கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

கிருமித்தொற்று இருந்த ஊழியர்களைப் பொறுத்தவரையில் இப்போது யாருக்குமே அறவே தொற்று கிடையாது. அவர்களால் இதர ஊழியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் கிருமி பரவக்கூடிய ஆபத்தும் இல்லை என்று பேராசிரியர் மாக் விளக்கினார்.

அந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி வெளியே தெரியாமலேயே இருந்தது என்றும் அதனால் அவர்கள் தங்களுக்குத் தொற்று இருந்ததா இல்லையா என்பது பற்றி எதையும் தெரியாத நிலையிலேயே இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு முன்பாக சமூக நிலையிலான பரவல் கொஞ்சம் இருந்தது என்று நாம் மதிப்பிட்டோம். கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு மிகவும் கணிசமான அளவுக்கு சமூகப் பரவல் குறைந்துவிட்டது. இதனால் அரசாங்கம் அமல்படுத்தி உள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பலன் தந்து இருக்கின்றன என்ற நமது மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 2 முதல் மூன்று கட்டங்களாகத் தளர்த்தப்படுகின்றன.