வீட்டிலிருந்தபடி வேலை செய்வது தொடர வேண்டும் - நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு அறிவுறுத்து

கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவிற்கு வந்த பிறகு, ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதை அனைத்து நிறுவனங்களும் ஒரு வழக்கமான தெரிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முதல் இரு கட்டத் தளர்வுகளிலும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கவிருக்கும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

அதாவது, இப்போது வீட்டிலிருந்தவாறு வேலை செய்யும் ஊழியர்கள் தொடர்ந்து அவ்வாறே செய்யவேண்டும். மாற்றுவழி எதுவும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டும்.

இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய பணியிடங்களில் சோதனை மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்து இருக்கிறது.

அப்படி சாத்தியமிருந்தும் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்காத நிறுவனங்கள் அல்லது ஊழியர்கள் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றாதது கண்டுபிடிக்கப்படும் நிறுவனங்கள், தங்களது பணியிடங்களை மூட வேண்டி இருக்கும்.

கொரோனா கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்கும்விதமாக, பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் முதல் இரு கட்டங்களின்போதும் ஊழியர்கள், வருகையாளர்கள் என அனைவரும் கலந்துறவாடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனங்கள் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விவரங்கள் அமைச்சின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வேலையிடங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், குழுப் பிணைப்பு நடவடிக்கைகள் போன்ற சமூக ஒன்றுகூடல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட அல்லது தள்ளிவைக்கப்பட வேண்டும்.