சுடச் சுடச் செய்திகள்

கடைக்காரர்களுக்கும் மூத்தோருக்கும் மின்னிலக்கத் திறன்களை கற்பிக்க புதிய வழி

சிங்கப்பூரில் மின்னிலக்கவழி தொடர்பு அதிகரித்து வரும் நிலையில் அதனால் எவரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் புதிய மின்னிலக்க அலுவலகத்தை அரசாங்கம் அமைக்க இருக்கிறது.

இதன்மூலம், மின்னிலக்கச் சாதனங்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகத்தைச் சென்றடையும் திட்டங்களை அரசாங்கம் இரட்டிப்பாக்கும்.

இம்மாத இறுதிக்குள் புதிய ‘எஸ்ஜி மின்னிலக்க அலுவலகம்’ 1,000 மின்னிலக்கத் தூதர்களைத் தெரிவுசெய்யும். அவர்கள் கடைக்காரர்களையும் மூத்தோரையும் அணுகி, அடிப்படை மின்னிலக்கத் திறன்களைக் கற்றுத் தருவர்.

மின்னிலக்கத் தூதர்கள் இந்த மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 112 உணவங்காடி நிலையங்களுக்கும் ஈரச் சந்தைகளுக்கும் சென்று, ‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடுகளைப் பயன்படுத்தி, ரொக்கமில்லா முறையில் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பணம் பெறும் வழிமுறைக்கு மாறும்படி கடைக்காரர்களை ஊக்குவிப்பர்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தொடர்பு, தகவல் அமைச்சும் ஒரு கூட்டறிக்கை வாயிலாக நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தன.

‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு மூலம் டேஷ், கிராப்பே, பேலா போன்ற 19 வெவ்வேறு வழிகளில் கடைக்காரர்கள் தங்களது சேவைகளுக்கும் பொருட்களுக்கும் பணம் பெறலாம்.

ஜூலை மாதத்தில் காப்பிக் கடைகளையும் தொழிலகங்களில் உள்ள உணவகங்களையும் மின்னிலக்கத் தூதர்கள் சென்றடைவர்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 18,000 கடைக்காரர்களை இந்த ஒருங்கிணைந்த மின்னிலக்கக் கட்டண முறையில் இணைப்பதே குறிக்கோள்.

“திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு நமது வாழ்க்கைமுறையை கொவிட்-19 கிருமிப் பரவல் மாற்றிவிட்டது. நம்மில் சிலர் மின்னிலக்க வழித் தொடர்பில் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய, கல்வி கற்க அல்லது கலந்துறவாடும் வகையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடிகிறது.

“அதேபோல, முதியவர்களும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரும் மின்னிலக்க முறையில் தொடர்புகொள்ள முடியும்போது அவர்களது வாழ்க்கையும் மேம்பட்டதாக இருக்கும்,” என்று தொடர்பு, தகவல் அமைச்சர்

எஸ்.ஈஸ்வரன் கூறினார்.

கடந்த வாரம் வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, கடைக்காரர்கள் மின்கட்டண முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து மாதங்களுக்கு மாதந்தோறும் $300 ஊக்கத்தொகை வழங்கப்படும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்திருந்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்னிலக்கத் தூதர்கள் 100,000 மூத்த குடிமக்களைச் சென்றடைவர். இணையம் வழியாகப் பொருள் வாங்குவது, திறன்பேசிச் செயலிகளைப் பயன்படுத்தி நண்பர்களையும் குடும்பத்தினரையும் தொடர்புகொள்வது போன்ற அடிப்படை மின்னிலக்கத் திறன்களை அவர்கள் கற்றுத் தெரிந்துகொள்ள மின்னிலக்கத் தூதர்கள் உதவுவர்.

“இந்த மின்னிலக்கத் திட்டங்களில் மூத்த குடிமக்களையும் விரைந்து இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அதன்மூலம் அவர்களும் மற்றவர்களைப் போல மின்னிலக்க முறையில் தொடர்புகொள்ளவும் பணப் பரிவர்த்தனை செய்யவும் முடியும்.

“இந்தத் திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களால் மின்னிலக்கச் சாதனங்களை வாங்க இயலாமல் போகலாம். அவர்களுக்கு நிதியாதரவு வழங்கப் படும்,” என அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.

தொண்டூழியர்களும் இந்தப் பணிக்கென பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்டவர்களும் மின்னிலக்கத் தூதர்களாகச் செயல்படுவர்.

சிங்கப்பூர் உயர்கல்வி நிலையங்களில் பயின்று, கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளியல் சரிவு காரணமாக வேலை கிடைக்காமல் சிரமப்படும் பட்டதாரிகளுக்கு ‘எஸ்ஜி மின்னிலக்க அலுவலகம்’ முன்னுரிமை அளித்து, அவர்களை மின்னிலக்கத் தூதர்களாகப் பணி அமர்த்தும்.

மின்னிலக்கத் தூதர்களாகப் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் அரசாங்கத்தின் ‘Careers@Gov’ இணையத்தளத்தில் தங்களது விவரங்களைப் பதிவுசெய்யலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon