விடுதிகளைச் சேர்ந்த 40,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதி

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் இருக்கும் சுமார் 40,000 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று அறவே இல்லை. ஆகையால் அவர்கள் வேலைக்குத் திரும்பலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அந்த ஊழியர்களில் 12,000 பேர் அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே இதர இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று நேற்று மனிதவள அமைச்சர் ஜோசஃப்பின் டியோ மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டார்கள். அவர்கள் பல்வேறு தற்காலிக இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளைச் சேர்ந்த மேலும் 8,000 ஊழியர்கள் கிருமித்தொற்று இல்லாத நிலையில் சக ஊழியர்களுடன் சேர்ந்து தங்கி இருக்கிறார்கள்.

மூன்று விடுதிகள், விடுதிகளாக மாற்றப்பட்ட 57 தொழிற்சாலைகள், கட்டுமான இடங்களில் உள்ள தற்காலிக தங்குமிடங்கள் எல்லாம் உட்பட 60 விடுதிகள் முதல் கட்டமாக இன்று முதல் கிருமியற்ற இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதாவது இந்த இடங்களில் தங்கியிருப்போரில் ஒருவருக்குக் கூட தொற்று இல்லை என்பது இதற்குப் பொருள் என்றார் அமைச்சர். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்றுச் சூழ்நிலையைக் கையாளும் அமைச்சுகள் நிலைப் பணிக்குழு, வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்புவதற்குத் தோதாக மருத்துவ ஆதரவு நடவடிக்கைகளை மேம்படுத்தி இருக்கிறது.

காலக்கிரம முறைப்படி பரிசோதனை நடத்துவது, மேம்பட்ட சுகாதாரக் கண்காணிப்பு முதலானவை இவற்றில் அடங்கும்.

எஸ்ஜி வொர்க்பாஸ் என்ற செயலியை ஏறக்குறைய எல்லா வெளிநாட்டு ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், எந்த ஊழியர் விடுதியில் இருந்து வேலைக்குச் செல்லலாம் என்பதை ஊழியருக்கும் முதலாளிக்கும் விடுதி நடத்தும் நிறுவனத்துக்கும் இந்தச் செயலி தெரிவிக்கும் என்று விளக்கினார்.

ஊழியர்கள் தங்களது செயலியில் பச்சை நிலையைக் கண்டால் அந்த ஊழியர்களின் முதலாளிக்கு வேலைகளைத் தொடங்க அனுமதி கிடைத்திருக்கிறது என்று பொருள். அதோடு ஊழியர்கள் வாழும் விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்பதையும் அந்தப் பச்சை நிலை காட்டும்.

இனி ஊழியர்களின் அன்றாட வாழ்வில் அதிக கட்டொழுங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறிய அமைச்சர், கடந்தகால பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் திரும்ப முடியாது என்பதே உண்மை நிலவரம் என்றும் தெரிவித்தார்.

ஊழியர்கள் பற்பல அணிகளாகப் பிரிந்து வேலை பார்க்க வேண்டும், வசிக்கவேண்டி இருக்கும்; விடுதிகளில் பாதுகாப்பு இடைவெளி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் குறிப்பிட்டார்.