சட்டவிரோதமாக கூடிய இந்திய மாணவர்களுக்கு அபராதம்

சட்டவிரோதமாக கூடிய இந்திய மாணவர்களுக்கு அபராதம்

1 mins read
e6d1b51c-e447-4a7d-8131-4bd09dbff451
-

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் இருந்தபோது சட்டவிரோதமாக ஒன்றுகூடிய ஒன்பது மாணவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 5ஆம் தேதியன்று அடுக்குமாடி வீடு ஒன்றில் ஒன்றுகூடினர். கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததாக ஒன்பது மாணவர்களும் ஒப்புக்கொண்டனர்.

20 வயது நவ்தீப் சிங், 21 வயது சஜன்தீப் சிங் ஆகிய இருவருக்கும் தலா $4,500 அபராதம் விதிக்கப்பட்டது. 28 வயது மாணவியான அவினாஷ் கோருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஏனைய ஆறு மாணவர்களுக்கும் தலா $2,500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்னொரு பெண்ணான 23 வயது புல்லர் ஜஸ்தீனா தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த மாணவர்கள் அனைவரும் எங்கு பயில்கிறார்கள் என்பது குறித்து நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. நவ்தீப் சிங், சஜன்தீப் சிங், அவினாஷ் கோர் ஆகிய மூவரும் கிம் கியட் சாலையில் உள்ள மூவறை வீட்டில் வாடகைக்கு இருந்தனர். மற்ற ஆறு பேரையும் நவ்தீப்பும் சஜன்தீப்பும் தங்கள் வீட்டிற்கு வரவழைத்தனர். புல்லரை அவினாஷ் கோர் வீட்டுக்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதாக புகார் கிடைத்து போலிசார் அங்கு சென்றபோது 10 பேரும் சிக்கினர்.